சிலாங்கூரில் பெரும்பாலான பகுதிகளிலும், கோலாலம்பூரில் சில பகுதிகளிலும் மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு (பி.கே.பி.டி.) அமலாக்கக் காலத்தில், வருமானம் பாதிக்கப்பட்டுள்ள அதிகமான மலேசியர்களுக்கு உதவுவதற்காக, மூன்று இளைஞர் அமைப்புகள் ‘புரோஜெக் ரக்யாட் கென்ஞாங்’ (Projek Rakyat Kenyang) நிதி திரட்டலைத் தொடங்கியுள்ளன.
ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட தங்களின் நிதி திரட்டும் முயற்சியானது, தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய உணவு கூடைகளை வாங்க ஒன்பது நாட்களில் RM15,000 திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது என ஸ்தேண்டப் மலேசியா (StandUp Malaysia), ஆருஸ் அனாக் மூடா (ARUS Anak Muda) மற்றும் ஒய்போலிதிக் (YPOLITIK) குழுவினர் தெரிவித்தனர்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், செயலக உறுப்பினர் ஒருவர் சரிபார்த்து, விநியோகத்திற்குப் பதிலளிப்பார் என்றும் அவர்கள் கூறினர்.
“தற்போது, அதிகமான மக்கள் பட்டினி கிடப்பதை மலேசியர்களால் பார்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், அதிகமானோர் விரக்தியில் உள்ளனர், அதிகமானவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.
“எனவே, இந்த மூன்று இளைஞர் அமைப்புகளும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ, ஒன்றிணைந்துள்ளன,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஜூன் 28-ம் தேதி, அனைத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக நடந்து வரும் உணவு கூடைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது தொகுதிகளுக்கு உணவு கூடைகளை வழங்க RM300,000 ஒதுக்கப்படும் என்றார்.
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ மற்றும் பெட்டாலிங் ஜெயா எம்.பி. மரியா சின் அப்துல்லா உட்பட, பல பி.எச். எம்.பி.க்கள் அரசாங்கம் வழங்கிய பொருட்களின் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பினர்.