`கருப்பு குறியீடு` மற்றும் `கருப்பு திங்கள்` நாங்கள் ஆதரிக்கிறோம் – எம்.எம்.ஏ.

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.), நாட்டில் சுகாதார ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

எனவே, ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரவைக் காட்ட மக்களை ஊக்குவிக்கும் பிரச்சாரமான ஜூலை 1 முதல் 12 வரை `கருப்பு குறியீடு` (கோட் பிளாக்) மற்றும் ஜூலை 12 அன்று கருப்பு திங்கள் ஆகியவற்றை அவர்கள் ஆதரிப்பதாக எம்.எம்.ஏ. கூறியது.

இருப்பினும், எம்.எம்.ஏ. எந்தவொரு சுகாதார வல்லுநர்களின் வேலைநிறுத்தங்களையும், குறிப்பாக தொற்றுநோய் காலகட்டத்தின் போது ஆதரிக்கவில்லை.

பிரதமர் முஹைதீன் பதவி விலக வேண்டும் என்றும், நாடாளுமன்றம் உடனடியாக கூடி அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தும் கருப்புக் கொடி பிரச்சாரத்தை அவர்கள் ஆதரிப்பதாக பிறர் தவறாகப் புரிந்துகொள்வதைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் எம்.எம்.ஏ. கூறியது.

எம்.எம்.ஏ. தலைவர் டாக்டர் எம் சுப்பிரமணியம், இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தெளிவுபடுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகச் சொன்னார்.

“நாங்கள் கவலைப்படுகிறோம், ஏனென்றால் சில தரப்பினர் கருப்பு கொடி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

“இது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எம்.எம்.ஏ. கவலை கொண்டுள்ளது, எனவே கோட் பிளாக் மற்றும் கருப்பு திங்கள் பிரச்சாரங்கள் மட்டுமே ஒப்பந்த மருத்துவர்களை ஆதரிப்பதற்கான எம்.எம்.ஏ.வின் முயற்சிகள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

எம்.எம்.ஏ. மக்களை இப்பிரச்சாரத்திற்கு ஊக்குவிப்பதாக சுப்பிரமணியம் கூறினார் :

1. அவர்களின் தனிப்பட்ட சுயவிவரப் படம் / நிறுவனம் அல்லது நிறுவனச் சின்னத்தை கருப்பு அல்லது ஒரே வண்ணமுடையதாக மாற்றவும்.

2. ஒப்பந்த மருத்துவர்கள் பற்றிய சமீபத்திய தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்காக SCHOMOS MMA முகநூல் பக்கத்தைப் பார்வையிடவும், அவர்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுங்கள்.

3. ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரவாக, ஜூலை 12-ம் தேதி வேலை இடத்துக்குக் கருப்பு நிற ஆடை அணிந்து செல்லுங்கள்.

4. #SaveMYcontractHCW #BlackMondayMY #CodeBlackMY என்ற ஹேஷ்டேக்குகளுடன் “நாங்கள் ஒப்பந்தச் சுகாதாரப் பணியாளர்களுடன் நிற்கிறோம்” என்றத் தட்டி ஒன்றைக் கையிலேந்தியப் புகைப்படத்தைப் பகிரவும்.

மற்ற நாடுகளில் பணியாற்றுவதற்காக, நாட்டை விட்டு வெளியேறிய திறமையான இளைஞர்களின் புலம்பலை வெளிகாட்டவும், மலேசியாவில் வாழும் ஒப்பந்தச் சுகாதார ஊழியர்களின் சிரமங்களை அங்கீகரிப்பதற்காகவும் கருப்பு வண்ணம் தேர்வு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

“2016 முதல் 23,077 ஒப்பந்த மருத்துவர்கள் நாட்டில் உள்ளனர், ஆனால் அவர்களில் 789 பேருக்கு மட்டுமே பொது சுகாதாரச் சேவையில் நிரந்தரப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.