‘நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விளக்கக் கூட்டமாக மாறிவிடுமோ’ – எம்.பி.க்கள் கவலை

ஜூலை 26-ம் தேதி கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர், அரசாங்கத்தின் விளக்கக் கூட்டமாக இருக்குமோ என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.

பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ.) வெளியிட்ட அறிக்கையில், சபை விவாதம் குறிப்பிடப்படவில்லை.

அதற்குப் பதிலாக, தேசிய மீட்புத் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்துவதையும், மாநாட்டை கலப்பின முறையில் (நேரடி & நேரலை) நடத்துவதற்கு ஏதுவாக, அனைத்து சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பி.எம்.ஓ. கூறியுள்ளது.

இது மக்களவையிலும் மேலவையிலும் அவசரப் பிரகடனங்கள் மற்றும் கட்டளைகளைத் தாக்கல் செய்ய உதவும்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, மக்களின் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப விரும்புவதால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வெறும் சம்பிரதாயமாக மட்டும் இருக்கக்கூடாது என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் இரஹ்மான் கூறினார்.

“விவாதங்களும் வாக்களிப்புகளும் இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை எதற்குத் திறக்க வேண்டும், அரசாங்கத்தின் உரையைக் கேட்பதற்காகவா?

“நான் மக்கள் பிரச்சினையைக் கொண்டு வர விரும்புகிறேன். இருதர நிலையிலான எஸ்.ஓ.பி., பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டணம் மற்றும் அவர்களின் தலைவிதி, வட்டியற்ற மொரோடோரியம், மக்களுக்கு முன்னுரிமை.. வங்கிகளின் இலாபத்திற்கு அல்ல என இன்னும் பல விஷயங்களைப் பேச விரும்புகிறேன்.

“சிறு வணிக வியாபாரம் கூடாது, ஆனால் தொழிற்சாலைகளைத் திறக்க முடியும். தயவுசெய்து, திறக்க விரும்பினால், முடிந்தவரை முழுமையாக திறக்கவும்.

“அரசாங்கப் பேச்சுக்களைக் கேட்பது எங்களுக்கு ஒரு சம்பிரதாயமல்ல. நான் மக்கள் பிரதிநிதி. மக்கள் எனக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். அவர்களுக்குச் சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்று சையத் சாதிக் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாயான் பாரு எம்.பி. சிம்-உம் இதே போன்ற கவலைகளை எழுப்பினர்.

“இந்த அறிக்கையிலிருந்து (பி.எம்.ஓ.), நாடாளுமன்றக் கூட்டத்தொடர், ஒரு விளக்கக் கூட்டமாக இருக்குமோ என்று எம்.பி.க்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள்.

“எந்தக் கேள்வியும் இல்லை, விவாதமும் இல்லை. தடுப்பூசிகள், (கடன்) ஒத்திவைப்பு, மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகள், எஸ்ஓபிக்கள் போன்ற மக்களின் பிரச்சினைகளை நாங்கள் எவ்வாறு கொண்டு வருவது?

“தீவிரச் சிகிச்சை பிரிவில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை சாகடித்து விடாதீர்கள்,” என்று சிம் தனது கீச்சகத்தில் கூறினார்.

யாங் டி-பெர்த்துவான் அகோங், மக்களவை அமர்வை விரைவில் கூட்டுமாறு தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து, ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று நேற்று பி.எம்.ஓ. அறிவித்தது.

அவசரகால அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனவரி 11 முதல் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது, இது ஆகஸ்ட் 1-ம் தேதி முடிவடையும்.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் “கோழை” என்று வர்ணித்தார்.

“8 மாதங்களுக்குப் பிறகு கூடவுள்ள நாடாளுமன்றம் ஐந்து நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

“முதல் நாள், மாட்சிமை தங்கியப் பேரரசரின் கூட்டத்திற்கான பதவியேற்பு, மீதமுள்ள நான்கு நாட்களுக்கு முக்கியப் பிரச்சினை.. நாடாளுமன்றம் எவ்வாறு கலப்பின முறையில் அமர முடியும் என்பதை விவாதித்து ஒப்புதல் அளிப்பதாகும்.

“அதன்பிறகு, பிரகடனமும் அவசரக் கட்டளையும் நம் முன் வைக்கப்படும்.

“உண்மையில், மீட்பு திட்டம் விவாதிக்கப்பட வேண்டும், மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் பேசப்பட வேண்டும், கோவிட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும் மற்றும் அவசரகாலக் கட்டளைகள் விவாதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.