ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னதா அம்னோ பி.என்.-இருந்து விலகும் – புவாட் நம்பிக்கை

ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னதா, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கான முடிவைக் கட்சி இறுதி செய்யும் என்று தான் நம்புவதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் புவாட் சர்காஷி தெரிவித்தார்.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, கூட்டணி அரசாங்கத்திலிருந்து கட்சியை வெளியேற்ற முயன்றார், ஆனால் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார், குறிப்பாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து.

“2020 அம்னோ மாநாட்டின் முடிவை இறுதி செய்ய, அதாவது 2021, ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகும், பி.என். அரசாங்கத்திற்குக் கட்சியின் ஆதரவு இருக்குமா என்பதனை இறுதி செய்ய, அம்னோ உச்சமன்றம் விரைவில் சந்திக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறியதாக சினார் ஹரியான்  மேற்கோளிட்டுள்ளது.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர், பிஎன்-லிருந்து விலகுவதற்கான முடிவை ஆதரித்ததாக புவாட் கூறினார்.

இருப்பினும், ஜாஹித் இன்னும் உச்ச மன்ற உறுப்பினர்களாக இல்லாதப் பெரும்பாலான அம்னோ எம்.பி.க்களின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.

ஜூன் 21-ம் தேதி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்டுவதற்கு, ஜாஹித் பிஎன் அரசாங்கத்திற்கு 14 நாட்கள் அவகாசம் அளித்தார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தை விரைவில் அழைக்க மறுத்த அரசாங்கத்திலிருந்து அம்னோவை நீக்க, ஜாஹித் எடுத்த ஒரு நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) நேற்று அறிவித்தது, இது தற்செயலாக ஜாஹித் வழங்கிய காலத்தின் கடைசி நாள்.

அம்னோவை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற ஜாஹித்துக்கு இன்னும் ஒரு காரணம் இருக்கிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

அம்னோவின் நிலைப்பாடு மாறவில்லை

இருப்பினும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதற்கான நடவடிக்கை, அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களின் எந்த நிலைப்பாட்டையும் மாற்றவில்லை என்று புவாட் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

“அம்னோவின் காரணம் தெளிவாக உள்ளது, பல்வேறு விஷயங்களில் அரசாங்கத்தின் தோல்வியே அதற்குக் காரணமாகும், குறிப்பாக தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அம்சத்தில்.

“பி.என். அரசாங்கத்தின் தோல்வியில் சிக்கிக்கொள்ள அம்னோ விரும்பவில்லை, இதற்கு முன்னர் அம்னோவின் கருத்துக்களைக் கேட்க விரும்பாத பிரதமர் முஹைதீன் யாசினின் அணுகுமுறை ஒருபுறம் இருக்கட்டும். ஒரு தெளிவான எடுத்துக்காட்டு என்னவென்றால், வங்கிகள் வழங்கும் கடன் ஒத்திவைப்புக்கான அழைப்பு… தானியங்கி மற்றும் அனைவருக்குமானதாக இல்லை,” என்று அவர் கூறினார்.

நேற்று, ஜாஹித் கோலாலம்பூரில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட பல அம்னோ தலைவர்களை அடுத்தகட்ட ‘நடவடிக்கையை ஒழுங்கமைக்க’ சந்தித்ததாக கூறப்படுகிறது.