எச்.கே.எல். மனநல வார்டில் கோவிட் -19 நோய்தொற்றுகள் – ஆடாம் உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர் மருத்துவமனையில், ஆண்கள் மனநல வார்டில் உள்ள 10 நோயாளிகள் கோவிட் -19 தொற்றுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார்.

அதனை அடுத்து, அந்த ஆண்கள் மனநல வார்டு “உறைய” வைக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதே வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆடாம் சொன்னார்.

ஒரு புதிய கோவிட் -19 நேர்வு அங்குக் கண்டறியப்பட்டாலும், எச்.கே.எல். அதன் எந்த வார்டுகளையும் மூடாது என்று அவர் கூறினார்.

“வழக்கமாக, தொற்றுகளைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட வார்டுகள் அல்லது பகுதிகளை மட்டுமே நாங்கள் உறைய வைப்போம்,” என்று அவர் தெரிவித்ததாக சின் சியு டெய்லி செய்திகள் கூறுகின்றன.

ஆடாமின் கூற்றுப்படி, ஒரு வார்டை “உறைய வைத்தல்” என்றால், இருக்கும் நோயாளிகள் அதே பகுதியில் இருப்பார்கள், அதே நேரத்தில் வார்டு புதிய நோயாளிகளை ஏற்றுக்கொள்ளாது.

இது வார்டில் உள்ள நோயாளிகளையும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும் கண்காணிப்பதே இதன் நோக்கமாகும்.

வார்டை முடக்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு முடிவுகள் அறியப்படும் என்றார் அவர்.

இதற்கிடையில், எச்.கே.எல். வழக்கம் போல் செயல்படும் என்றும் ஆடாம் வலியுறுத்தினார்.

“புதிய நோயாளிகள் பாதிக்கப்படாத பிற வார்டுகளில் தங்குவர்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், எட்டு நேர்வுகள் கண்டறியப்பட்ட பின்னர், அந்த ஆண்கள் மனநல வார்டு ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதாக தி மலேசிய இன்சைட் தெரிவித்துள்ளது.

மனநலத் துறையில் உள்ள பல ஊழியர்கள், நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டனர்; ஜூலை 1-ஆம் தேதி வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் இது ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.