அசைபட வழக்கு : மேலும் 4 ஆர்வலர்களிடம் போலீஸ் விசாரணை

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்ட தனிநபர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான அசைபடம் குறித்து சாட்சியமளிக்க மேலும் நான்கு ஆர்வலர்களை போலீசார் அழைத்தனர்.

ஜூலை 2-ம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சுதந்திரத் திரைப்பட வலையமைப்பின் (Freedom Film Network – எஃப்எஃப்என்) அலுவலகம் மற்றும் கேலிச்சித்திர ஓவியர் அமின் லண்டாக்கின் வீடு ஆகியவற்றைச் சோதனை செய்த பின்னர், அமீன் மற்றும் எஃப்எஃப்என் இணை நிறுவனர் ஹன்னா ஹர் இருவரையும் போலீசார் விசாரித்தனர்.

இன்று பிற்பகல், சுவாராம் ஆர்வலர்கள் சிவன் துரைசாமி, முகமது அல்ஷாத்ரி, குவா கியா சூங் மற்றும் ஒருமைப்பாடு பணிக்குழுவின் இணை நிறுவனர் ஷரோன் வா ஆகியோரைப் புக்கிட் அமான் காவல் தலைமையகத்தில் விசாரிக்கவுள்ளனர்.

இந்த நடவடிக்கை ஒரு மிரட்டல் என்று சுவாராம் விவரித்தது.

சுவாராம் வெளியிட்ட ‘சில்லி பௌடர் எண்ட் தின்னர்’ என்ற அசைபடம், 16 வயது இளைஞனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது, அவருடன் மேலும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.

நேற்று, மனித உரிமைகள் சங்கம் (ஹக்காம்) இந்த விசாரணையைக் கண்டித்து, இது காவல்துறையினரின் “பதிலடி” என்று விவரித்தது.