முழு கதவடைப்பு அமல்படுத்திய முதல் மாதத்தில், பணியிடம் சார்ந்த கோவிட் -19 திரளைகளில் 60 விழுக்காடு தொழிற்சாலையிலிருந்து வந்தவை.
இது, ஜூன் 1 முதல் ஜூலை 1 வரையில், 18,065 நேர்வுகளுக்குச் சமம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கடந்த வார இறுதியில் வர்த்தகச் சபைக்கு அளித்த விளக்கத்தில் தெரிவித்தார்.
நூர் ஹிஷாம் கூறுகையில், இந்தக் காலகட்டத்தில், உற்பத்தித் துறையைச் சேர்ந்த 227 திரளைகளுடன், பணியிடத்தில் மொத்தம் 436 திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.
உற்பத்தித் துறையின் மொத்தம் 85 திரளைகள் சிலாங்கூரில் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஜொகூர் (6), பினாங்கு (24), கெடா (14), நெகிரி செம்பிலான் (13), மீதமுள்ளவை மற்ற மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
மலேசியாவில், ஜூன் 1 முதல் ஜூலை 1 வரை 186,610 கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இதில் 10 விழுக்காடு உற்பத்தித் துறையிலிருந்து பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் பணியிட நேர்வுகள் 16 விழுக்காடாக உள்ளன.
தொழிற்சாலை திரளைகள் தவிர, கோவிட் -19 தொற்றின் அதிகரிப்புக்குப் பங்களித்த முதல் மூன்று துறைகள் – 122 திரளைகள் மற்றும் 4,762 நேர்வுகள் கொண்ட சேவைத் துறையாகும், அதேபோல் கட்டுமானத் துறையிலும் 48 திரளைகளுடன் 4,465 நேர்வுகள் பதிவாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று, நூர் ஹிஷாம் வழங்கிய ஒரு சுருக்கமான குறிப்பிலிருந்து, மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (மைக்கி), நேற்று அதன் உறுப்பினர்களுக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டது.
தனது தரப்பினருக்கு இக்குறிப்புகளை வெளியிட்டதை, மலேசியாகினிக்கு மைக்கி உறுதிப்படுத்தியது, மேலும் தகவலுக்கு மலேசியாகினி நூர் ஹிஷாமைத் தொடர்பு கொண்டுள்ளது.
கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, உற்பத்தித் துறையைக் குறை கூறுவது நியாயமற்றது என்று சர்வதேச வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் அஸ்மின் அலி கடந்த வாரம் தெரிவித்தார்.
பணியிடத் திரளைகள் ஏராளமான திரளைகளைக் கொண்டிருந்தாலும், நேர்வுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறை நேர்வுகள் அறிக்கையிடப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் ஒரு சிறிய பகுதியையேக் கொண்டிருந்தன.
ஜூலை 3 முதல், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள சில பகுதிகளில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.டி) கீழ், அரிசி, ரொட்டி, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, பால், குழந்தைகளுக்கான பால், மருந்துகள் மற்றும் முகக்கவரி உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
‘கிள்ளான் பள்ளத்தாக்கில் ஐ.சி.யூ. 120% கொள்ளளவுடன் இயங்குகிறது’
இதற்கிடையில், கிள்ளான் பள்ளத்தாக்கில், தீவிரச் சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யூ.) இப்போது 120 விழுக்காடு திறனுடனும், நாடு முழுவதும் 97 விழுக்காடு திறனுடனும் இயங்குகிறது என்று அந்த விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பி.கே.பி. 3.0 இல்லாமல், ஒரு நாளைக்கு 13,000 நேர்வுகளை நாம் எட்டினால், நாட்டின் சுகாதார அமைப்பு சரிந்துவிடும் என்று அவர் (நூர் ஹிஷாம்) கூறினார்.
“கிள்ளான் பள்ளத்தாக்கில், பி.கே.பி.டி. செயல்படுத்தப்பட்ட போதிலும், ஐ.சி.யூ. படுக்கைகளின் பயன்பாடு இப்போது 120 விழுக்காடாக உள்ளது, மேலும் சுகாதார வசதிகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
தனியார் துறையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1,267 படுக்கைகளில் 51 விழுக்காடு பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், 129 ஐ.சி.யூ. படுக்கைகளில் பாதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், 100,000 மக்கள்தொகைக்கு 12.2-க்கும் குறைவான நேர்வுகளைப் பதிவு செய்து, 75 விழுக்காட்டிற்கும் குறைவான ஐ.சி.யூ. படுக்கைகள் பயன்பாட்டில் உள்ள சில மாநிலங்கள், தேசிய மறுவாழ்வு திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளன.
பெர்லிஸ், பேராக், கிளந்தான், திரெங்கானு மற்றும் பஹாங் ஆகியவை நேற்று 2-ஆம் கட்டத்திற்குள் நுழைந்தன, அதே நேரத்தில் பினாங்கும் நாளை அதே அடிச்சுவடுகளைப் பின்பற்றும்.
சபாவும் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையும் தருவாயில் உள்ளதாக அச்சுருக்கக் குறிப்பு குறிப்பிட்டது.
கட்டம் 2, அதிகமான வணிகங்கள் இயங்க அனுமதிக்கிறது, ஆனால் பிறக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் இருக்கும்.