ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினைகள் மற்றும் புதிய மருத்துவர்கள் மற்றும் மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்எம்ஏ) கோரிக்கைகளுக்கு இடையே, 2021 டிசம்பர் 5 முதல் 2022 டிசம்பர் 20 வரையில், ஒப்பந்த அடிப்படையிலான நியமனம் அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் எனச் சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவிட் -19 நோய்த்தொற்றைத் தொடர்ந்து, கிரேடு யுடி43 மருத்துவர்களுக்கு, ஒரு முறை ஒப்பந்தம் (one-off) வழங்கப்படும் என்று மலேசியாகினி பார்த்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“துறைத் தலைவரால் மாற்றம் அறிவுறுத்தப்படாவிட்டால், உங்களது ஒப்பந்த அடிப்படையிலான மறு நியமனம் அதே வேலை இடத்தில் தொடரும்.
“இருப்பினும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை (பிக்) செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, தடுப்பூசி மையங்களில் (பிபிவி) உங்களை நியமிக்க துறைத் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்,” என்று அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம், அவ்வப்போது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் சேவை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுஆய்வு செய்வதற்கு உட்பட்டது என்றும், இது ஓர் அடிப்படையில் செய்யப்படுவதைத் தவிர, எதிர்காலத்திற்கான முன்னோடி அல்ல என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி மருத்துவர்களிடையேப் பணியமர்த்தல் தாமதப் பிரச்சினைக்கு ஆரம்ப தீர்வாக இந்த ஒப்பந்த முறை முதன்முதலில் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுச் சேவையில் சேருவதன் மூலம், புதிய மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த தொகுப்பு வழங்கப்படும், இது மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் இரண்டு வருடங்கள் விருப்பத்துடன் நீட்டிப்பு ஆகும்.
இதுவரை மொத்தம் 23,077 ஒப்பந்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நிரந்தர வேலைவாய்ப்பு 789 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு தற்போது பொது சுகாதாரச் சேவையில் உள்ளனர்.
கருப்பு குறியீடு மற்றும் கருப்பு திங்கள் (Code Black dan Black Monday) பிரச்சாரங்கள், இந்த முடிவை எடுக்க அரசாங்கத்திற்குச் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு எம்.எம்.ஏ. பிரதிநிதி மலேசியாகினியிடம் கூறினார்.
“இது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்தத் திட்டம் புதியது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அதைச் செயல்படுத்துவது அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
“இந்த ஆண்டின் இறுதியில் ஒப்பந்தங்கள் காலாவதியாகும் முதல் பிரிவு (ஒப்பந்த) மருத்துவர்களில் பெரும்பாலானவர்களுக்குச் சுகாதார அமைச்சு ஒரு வருட நீட்டிப்பு வழங்குகிறது.
“இருப்பினும், இந்த நடவடிக்கை பிரச்சினையைத் தீர்க்காது,” என்று அவர் கூறினார்.
நீண்டகால தீர்வுகளை வகுக்க வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு அவர்களின் நோய்க்கானக் காரணத்தை அடையாளம் காணாமல் சிகிச்சையளிப்பது போன்று, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடாது என்றும் எம்எம்ஏ பல முறை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது என்றார் அவர்.
ஒப்பந்த நீட்டிப்பு நன்றாக இருந்தாலும், வழங்கப்படும் ஒரு வருட காலம் பொருத்தமான ஒன்று அல்ல என்று அவர் மேலும் சொன்னார்.