2014-ல் தடுப்புக்காவலில் இறந்தவர் குடும்பத்திற்கு RM300,000 இழப்பீடு

2014-இல், தடுப்புக் காவலில் இறந்த கமருல்னிஸாம் இஸ்மாயில் எனும் தொழிற்சாலை ஊழியரின் குடும்பத்திற்கு, அலட்சியம் காரணமாக RM250,000, மேலும் சார்புடைய உரிமைகோரலுக்கு RM40,800 இழப்பீடு வழங்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தனது மகனின் மரணத்தைத் தொடர்ந்து, இழப்பீடு வழங்குமாறு அவரது 71 வயது தாய் ரஹாயா சல்லேஹ் அளித்த மேல்முறையீட்டை விசாரித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யாகோப் சாம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் ஏகமனதான முடிவில், குடும்பத்திற்குச் சட்டரீதியான செலவான RM5,000-யும் செலுத்த அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸூம் வழியாக, இயங்கலை நடவடிக்கைகளின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது

ஜூன் 24-ம் தேதி, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதற்காக குடும்பத்திற்கு RM100,000 இழப்பீடு மற்றும் பொது அலுவலகத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக (தவறாக) RM50,000 ஆகியவற்றைக் கைவிட வேண்டுமென்ற அதிகாரிகளின் முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஓரளவு அனுமதித்தது.

வழக்கறிஞர் எம். விஸ்வநாதன்

அந்த நேரத்தில், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அஹ்மத் நாஸ்ஃபி யாசின் மற்றும் எம் குணாளன் இருவரும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட குடும்பங்களுக்கான சட்டச் செலவுகளை RM12,000-லிருந்து RM30,000-ஆக உயர்த்தினர் மற்றும் குடும்பச் சேதங்களுக்காக RM10,000 சிறப்பு நிதியை அனுமதித்தனர்.

முன்னதாக, குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் எம். விஸ்வநாதன் தனது தரப்பினர் உரிமைகோரல்களுக்கு RM71,400 மற்றும் அலட்சியம் காரணமாக RM250,000 கோரினர் என்றார்.

ஆகஸ்ட் 2019-இல், தடுப்புக் காவலின் போது மரணம் விளைந்ததற்குக் காரணமாக, 12 நபர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கமருல்னிசாமின் குடும்பத்தார் தொடுத்த வழக்கில், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததற்காக RM100,000, பொது அலுவலில் தவறான நடத்தைக்காக RM50,000, முழு விசாரணை செலவுகளுக்காக RM12,000 ​​மற்றும் இறுதிச் சடங்குச் செலவுகளுக்காக RM2,000 என ஈப்போ உயர்நீதிமன்றம் அனுமதித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

காமருல்னிசாமின் மரணத்திற்கு, அதிகாரிகளின் அலட்சியம்தான் வழிவகுத்தது என்பதைக் கண்டறிந்த போதிலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 7 முதல் 8 வரையில், தாப்பா சிறைச்சாலையில் அவரது மரணம் தொடர்பாக குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2014 மார்ச்சில், தொழிற்சாலை தொழிலாளியான கமருல்னிசம், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக, பினாங்கு, பண்டார் பெர்டா காவல் நிலையத்தில் முதலில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர், சிறு குற்றச் சட்டம் 1955, பிரிவு 29-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, 14 நாட்கள் சிறைத்தண்டனையுடன் RM800 அபராதமும் விதிக்கப்பட்டார். பின்னர் அவர் தாப்பா சிறைக்கு மாற்றப்பட்டார்.

மூன்று நாட்கள் சிறையில் இருந்தபின், அவர் தாப்பா சிறைச்சாலையில் மயக்க நிலையில் காணப்பட்ட அவர், பின்னர் தாப்பா மருத்துவமனையில் இறந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், கமருல்னிசம் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக இறந்தார் என்று கண்டறியப்பட்டது, ஆனால் அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் மரணத்திற்கான காரணத்துடன் பொருந்தவில்லை என்பதனைக் கண்டறிந்த அவரது குடும்பத்தினர், போலீஸ் புகார் அறிக்கையைப் பதிவு செய்தனர்.

மார்ச் 2017-இல், கமருல்னிசாமின் தாயார் ரஹாயா, வழக்கறிஞர் எம் விஸ்வநாதன் மூலம் வழக்கைத் தாக்கல் செய்தார்.

கூட்டாட்சி மூத்த வழக்குரைஞர்கள் அஸீஸான் அர்ஷாத் மற்றும் ஆண்டி ரஸாலிஜயா டாடி இருவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.