பி.எச். : மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கவே நாடாளுமன்றம், சொற்பொழிவு கேட்பதற்கல்ல

ஜூலை 26-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தின் நோக்கம், “அமைச்சர்களின் சொற்பொழிவுகளை” கேட்பதற்காக இல்லாமல், மக்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்கும் மீட்டெடுப்பதற்குமாக இருக்க வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை மன்றம் தெரிவித்துள்ளது.

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் ஐந்து நாட்களுக்குச் சுருக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து கருத்து தெரிவித்தனர்.

மக்களவையில் எந்த விவாதமும் இல்லை என்றால், குறுகிய காலக் கூட்டத் தொடர் பயனற்ற ஒன்று என்று அவர்கள் விவரித்தனர்.

“நாடாளுமன்றம், பிரச்சினைகளைக் கேட்பதற்கும், குறைகளுக்குக் குரல் கொடுப்பதற்கும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், நாட்டின் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்குமான ஒரு தளமாகும்.

“விவாதத்திற்கு இடம் வழங்காமல், அமைச்சர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கான ஓர் இடம் நாடாளுமன்றம் அல்ல,” என்று அவர்கள் இன்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

முன்னதாக, பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து நாள் மாநாட்டுக் காலம் நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதேப் பிரச்சினை குறித்து தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர்.

பி.எச். தலைவர்களின் கூட்டு அறிக்கையின்படி, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது, ஏனெனில் கோவிட் -19 தேசிய மீட்புத் திட்டம் பற்றிய தகவல்களை எந்தவொரு விவாதமும் இல்லாமல் வழங்கவே பி.என். விரும்புகிறது என்பதை இது காட்டுகிறது. மேலும், பிரகடனம் மற்றும் அவசரநிலை கட்டளைகள் மட்டுமே தாக்கல் செய்யப்படும், விவாதிக்கப்படவோ முடிவு செய்யப்படவோ மாட்டாது.

“எனவே, இந்தச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டாகத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க அரசாங்கம் எதிர்க்கட்சியை அழைக்க வேண்டும், ஒரு தீர்வுக்காக செயல்பட வேண்டும், இதனால் மலேசியர்கள் கோவிட் -19 நெருக்கடி மற்றும் பொருளாதாரத்திலிருந்து வெளியேற முடியும்.

“நியாயமான சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் கோர வேண்டியதில்லை.

“நாட்டைக் காப்பாற்ற நாங்கள் கோவிட் -19 தொற்றை ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும், பதவிகளைப் பாதுகாக்க அரசியல்மயமாக்கக்கூடாது,” என்று அவர்கள் கூறினர்.