பிரதமர் முஹைதீன் யாசின், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைத் துணைப் பிரதமராக நியமித்தார்.
வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், புதிய மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், முன்னர் இஸ்மாயில் வழிநடத்திய பாதுகாப்புக் குழுவின் கடமைகளை அவர் இனி ஏற்றுக்கொள்வார்.
இத்தகவலை, ஓர் ஊடக அறிக்கை மூலம் பிரதமர் அலுவலகம் சற்றுமுன்னர் அறிவித்தது.
தேசிய மீட்பு திட்டத்தைச் செயல்படுத்துவதில், அவருக்கு உதவியாகவும் ஹிஷாமுடின் இருப்பார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அந்த ஒரு பக்க அறிக்கையின்படி, இஸ்மாயில் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலும் தொடர்ந்து இருப்பார்
“இந்த நியமனம் பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கவும், நாடு சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்தச் சூழ்நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும்,” என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
இந்த நியமனங்கள் பேரரசருக்கு அறிவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
“இந்த நியமனம் தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் (பிஎன்) திறனை மேலும் அதிகரிக்கும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்வதில், அரசாங்கத்தை உருவாக்கும் தரப்பினரிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மற்றும் வெளிப்படையான, ஊழல் இல்லாத மற்றும் பிஎன் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதில் உதவும்,” என்றும் பிரதமர் அலுவலகம் கூறியது.