ஜாஹிட்டின் அழைப்பை மசீசவும் ம.இ.கா.வும் புறக்கணித்தன

பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த அம்னோ உச்சமன்றத்தின் முடிவை, தேசிய முன்னணியின் அம்னோ பங்காளிகள் ஆதரிக்க மாட்டார்கள்.

மாறாக, அடுத்தப் பொதுத் தேர்தல் வரையில் முஹைதீன் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மசீச தலைமைச் செயலாளர் சோங் சின் வூன், அம்னோ தேசியக் கூட்டணிக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது, தனது கட்சியின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்றார்.

“தேசிய முன்னணி ஒரு புதிய மற்றும் அதிகாரப்பூர்வ முடிவை எடுக்காவிட்டால், முந்தைய முடிவுக்கு ஏற்ப, அடுத்தத் தேர்தல் வரையில் மசீச தொடர்ந்து தேசியக் கூட்டணியை ஆதரிக்கும்,” என்று அவர் ஃப்ரீ மலேசியா டுடே (எஃப்எம்டி) மேற்கோளிட்டுள்ளார்.

முஹைதீன் பதவி விலக வேண்டும் என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அழைப்பு விடுத்ததை, ம.இ.கா. தலைவர் எஸ் விக்னேஸ்வரன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் எஃப்எம்டி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

“அம்னோ ஒரு முதிர்ச்சியடைந்த கட்சி, அவர்கள் ஆட்சி செய்தபோது, ​​தங்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளால் பல கோரிக்கைகள் இருந்தன என்பதையும் அவர்கள் அறிவார்கள், அவர்கள் அதைச் செய்யவில்லை, ஏனெனில் அது வெறும் அழுத்தம் என்று அவர்களுக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.

முஹைதீனைப் பதவி விலகுமாறு வற்புறுத்துவதற்குப் பதிலாக, தனது கட்சி சார்ந்த அமைச்சர்களை முதலில் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜாஹிட் கேட்டிருக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

நேற்று, பிரதமர் முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான முடிவை அம்னோ உச்சமன்றத்தின் பெரும்பான்மையினர் ஆதரித்துள்ளனர்.

அப்படியிருந்தும், 38 அம்னோ எம்.பி.க்களும் ஜாஹிட்டை ஆதரிக்கவில்லை, அவர்களில் பெரும்பாலோர் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோருக்கு ஆதரவாக உள்ளனர்.

தேசியக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான ஜாஹிட்டின் முந்தைய முயற்சியைத் தடுக்க, இஸ்மாயிலும் ஹிஷாமுடினும் அம்னோ எம்.பி.க்களை அணிதிரட்டினர்.

இருப்பினும், நான்கு இடங்கள் பெரும்பான்மையுடன் இருக்கும் முஹைதீனின் அரசாங்கத்தை வீழ்த்த, 38 அம்னோ எம்.பி.க்களில் ஒரு சிலர் தன்னுடன் இருந்தால் மட்டுமே ஜாஹிட் நினைத்தது நடக்கும்.

ஜாஹிட்டின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெரும்பாலான எம்.பி.க்கள் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவார்களா அல்லது தேசியக் கூட்டணி அரசாங்கத்துடன் இருப்பார்களா என்று இன்னும் அறிவிக்கவில்லை.