‘நாடாளுமன்றக் கூட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்’ – பி.என். அறிக்கையில் அம்னோ இல்லை

தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தின் கட்சிகள், நடக்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் “துஷ்பிரயோகம் செய்யக்கூடாது” என்று இன்று எச்சரித்தன.

அந்த நினைவூட்டல், அம்னோ சேர்க்கப்படாத ஒரு கூட்டு அறிக்கையில் வெளியிடப்பட்டது.

பி.என். உறுப்புக் கட்சிகளின் தகவல் பிரிவுத் தலைவரின் அந்த அறிக்கையில், தேசிய முன்னணியில் உள்ள அனைத்து அம்னோ கூட்டாளர்களும், ம.சீ.ச., ம.இ.கா. மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவை அடங்கும்.

“இந்தச் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு, மக்களின் நலன்களை முழுமையாக விவாதிக்க ஒரு தளமாகப் பயன்படுத்தப்படும் என்றும், தனிப்பட்ட இலாபத்திற்காக தவறாக பயன்படுத்தப்படாது என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த அறிக்கையில், பி.என். அரசாங்க ஆதரவு கட்சிகளான (பெர்சத்து, பாஸ், எஸ்ஏபிபி, ஸ்டார், கெராக்கான்), தேசிய முன்னணி (ம.இ.கா., மசீச, பிபிஆர்எஸ்), ஜிபிஎஸ் (பிபிபி, பிஆர்எஸ், பிடிபி, எஸ்யூபிபி) மற்றும் பிபிஎஸ் ஆகியவற்றின் அனைத்து தகவல் பிரிவுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

ஜூலை 7-ம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசினுக்கு அளித்த ஆதரவைத் தனது கட்சி திரும்பப் பெறுவதாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அறிவித்தார்.

எவ்வாறாயினும், கட்சி அறிக்கைகளால் பெரும்பான்மையைத் தீர்மானிக்க முடியாது என்பதால், முஹைதீன் தொடர்ந்து பிரதமராக இருக்க முடியும் என்று சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் கூறினார்.

அதற்குப் பதிலாக, ஜூலை 26-ல், நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அதன் உறுப்பினர்கள் இந்த விஷயத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

அம்னோவின் ஆதரவுடன், முஹைதீனுக்கு நாடாளுமன்றத்தில் நான்கு உறுப்பினர்கள் பெரும்பான்மை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அம்னோவுக்கு 38 எம்.பி.க்கள் உள்ளனர், ஆனால் அனைவரும் முஹைதீனை நீக்குவதற்கான தங்கள் கட்சியின் முடிவை ஆதரிக்கவில்லை.

அம்னோவில், முஹைதீனின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவரான பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அம்னோ முடிவை ஜாஹித் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் துணைப் பிரதமராக முஹைதினால் நியமிக்கப்பட்டார்.

முஹைதீனின் மற்றொரு வலுவான ஆதரவாளரான, செம்ரோங் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுதீன் ஹுசைன் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தேசியக் கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர்கள், இன்று தங்கள் அறிக்கையில், இஸ்மாயில் மற்றும் ஹிஷாமுதீன் நியமனங்களை வாழ்த்தினர்.

“இந்த நியமனங்கள் அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையில், தற்போதுள்ள நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எங்கள் கட்டமைப்பிற்குள் வெளிப்படையான, ஊழல் இல்லாத, மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடிய அரசாங்கமாக இது விளங்க வேண்டும்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற வேண்டும் என்ற மாமன்னரின் பரிந்துரைக்கு ஏற்ப வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தையும் அவர்கள் வரவேற்றனர்.