நாட்டில், இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில், கோவிட் -19 தொற்றின் புதிய தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை சரிவைக் காணலாம் என்று மலேசியச் சுகாதார அமைச்சு எதிர்பார்ப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நாடு முழுவதும் தீவிரமான தடுப்பூசி செயல்முறை மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற, பொது சுகாதாரக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், தொற்றுநோயின் தொற்று வளைவை மீண்டும் நேராக்க முடிந்தது.
நூர் ஹிஷாமின் கூற்றுப்படி, கடந்த சில நாட்களாகப் புதிய நேர்வுகளின் அதிகரிப்பினால், கோவிட் -19 தொற்றை அதிக அளவில் குறிவைத்து சோதனைகள் செயல்படுத்தப்படுவதால், குறிப்பாக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில், அவை இப்போது இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு (பி.கே.பி.டி) உட்பட்டுள்ளன.
“கிள்ளான் பள்ளத்தாக்கில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, இலக்கு வைத்த திரையிடல் மற்றும் சமூகத் திரையிடல் செயல்படுத்தப்படுவதால், தினசரி நேர்வுகள் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.
இருப்பினும், நல்ல கட்டுப்பாட்டு முறைகள் (நடமாட்டக் கட்டுப்பாடுகள்) மூலம் நாம் இன்னும் நிலையான எண்ணிக்கையிலான நிகழ்வுகளைக் காண்போம், மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் நேர்வுகள் குறைவதைக் காண்போம் என்று நான் நம்புகிறேன்.
“அதே நேரத்தில், தடுப்பூசி செயல்முறையும் விரைவுபடுத்தப்பட வேண்டும்,” என்று அவர், நேற்றிரவு, பெர்னாமா டிவி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராகக் கலந்துகொண்டபோது கூறினார்.
கோவிட் -19 நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் விளைவுகளிலிருந்து அனுபவங்களையும் படிப்பினைகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம், நாடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், புதிய நிகழ்வுகளின் மற்றொரு எழுச்சியைத் தூண்டும் சில துறைகளைத் திறக்க அவசரப்படக்கூடாது என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, அதிக தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியான இணக்கம் அவசியம். உற்பத்தித் துறை போன்ற துறையில் நிலையான எஸ்ஓபி-க்கள் அமல்படுத்துவதை இன்னும் மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பணியிடங்களில்.
அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையினால், தடுமாறும் பல மருத்துவமனைகளின் நிலைமையை விளக்கிய நூர் ஹிஷாம், நோயாளிகளுக்கு இடமளிக்கும் வகையில் மருத்துவமனையின் திறனைச் சுகாதார அமைச்சு தீவிரமாக அதிகரித்து வருவதாகக் கூறினார், குறிப்பாக தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) நான்கு மற்றும் ஐந்தாம் நிலை நோயாளிகளுக்கு.
“நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்றால், நான்கு மற்றும் ஐந்தாம் நிலை நோயாளிகள், ஐ.சி.யூ.வில் இரண்டு முதல் ஐந்து வாரங்களுக்குச் சிகிச்சை பெற நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள், இதில் சுவாச உதவி தேவைப்படுபவர்களும் அடங்குவர்.
“இது நாங்கள் எதிர்கொள்ளும் ஒரு தடை, ஏனென்றால் நிலை நான்கு மற்றும் நிலை ஐந்து நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, கூட்டம் அதிகமாகிவிட்டது. அதனால்தான், மருத்துவமனையின் திறனை அதிகரிக்க சுகாதார அமைச்சு அனைத்து சிறந்த முயற்சிகளையும் மேற்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.
கோவிட் -19 நோய்த்தொற்றில் ஐந்து நிலைகள் உள்ளன. நிலை ஒன்று – அறிகுறியற்றது; நிலை இரண்டு – இலேசான அறிகுறிகள்; நிலை மூன்று – அறிகுறி மற்றும் நிமோனியா; நிலை நான்கு – அறிகுறி, நிமோனியா மற்றும் ஆக்சிஜன் உதவி தேவை; அத்துடன் ஐந்தாம் நிலை – ஐ.சி.யூ.வில் மோசமான அறிகுறிகளுடன், சிகிச்சை தேவைப்படுகிறது.
ஜூலை 10-ம் தேதி, மலேசியா மிக அதிகமான புதிய தினசரி நேர்வுகளை (9,353) பதிவுசெய்தது, மேலும் 29 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன, அவற்றுள் 19 பணியிடத் திரளைகள் ஆகும்.
- பெர்னாமா