சுங்கை பூலோ மருத்துவமனையில் கர்ப்பிணிகள் சம்பந்தப்பட்ட நேர்மறை நேர்வுகள் அதிகரிப்பு

ஜூன் முதல் இம்மாதத் தொடக்கம் வரையில், சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐந்து கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர்.

பொது சுகாதார அமைப்பின் வட்டாரங்களின்படி, தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நேர்வுகளில் அவை சேர்க்கப்பட்டுள்ளன, இது கடந்த மே மாதத்திலிருந்து அதிகரித்து வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரின் குழந்தைகள், அறுவைச் சிகிச்சை மூலம் முன்கூட்டியே மீட்கப்பட்டன என மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டது.

“ஒரு குழந்தை இறந்துபோனது, மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, அத்தாயார் மயக்க நிலையில் இருந்தார்,” என்று பெயரிட மறுத்த ஒரு சுகாதார ஊழியர் மலேசியாகினியிடம் கூறினார்.

கடந்த மே மாதம் தொடக்கம், கர்ப்பிணித் தாய்மார்கள் சம்பந்தப்பட்ட நேர்மறை நேர்வுகளில் அதிகரிப்பு காணப்படுவதாக சில ஆதாரங்கள் சுட்டிக்காட்டின.

ஜூன் மாதத்தில் மட்டும், குறைந்தது 100 கர்ப்பிணி பெண் நோயாளிகளுக்கு மருத்துவமனை சிகிச்சை அளித்தது.

பல சந்தர்ப்பங்களில், சுவாசக் கருவியை நிறுவுவதற்காக, பிறக்காத குழந்தையை அறுவைச் சிகிச்சை வழியாக அகற்ற வேண்டி வரும்.

நேர்மறை கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் இன்னும் பொதுவாக அறியப்படவில்லை.

இருப்பினும், பொதுவாக கணவர்கள், ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக ஊழியர்களால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

நோயாளியின் நிலை வேகமாக மோசமடைகிறது

நேர்மறை கர்ப்பிணித் தாயாருக்குச் சுகாதாரச் சிக்கல்களுக்கான ஆபத்து அதிகம் இருப்பதால், மருத்துவமனை வார்டில் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு ஐ.சி.யூ.வில் இடம் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இருப்பினும், சுங்கை பூலோ மருத்துவமனை ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பியிருப்பதால், புதிய கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பது குறித்து சுகாதார ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்.

கர்ப்பிணி நோயாளிகளின் நிலை முன்பை விட, தற்போது வேகமாக மோசமடைவதை மருத்துவர்கள் கண்டறிந்தது மேலும் வருத்தமளிப்பதாக உள்ளது.

மற்றொரு ஆதாரம், தினசரி நேர்வுகள் அதிகரித்து வருவதால், கர்ப்பிணித் தாய்மார்களை ஐ.சி.யூ.வில் அனுமதிக்க காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றது.

“கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் சிலசமயங்களில் காத்திருக்க வேண்டியும் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கர்ப்பிணித் தாய்மார்கள் எப்போதும் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கோவிட் -19 தடுப்பூசி பெற வேண்டும் என்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

கர்ப்பிணித் தாய்மார்களின் நேர்வுகள் குறித்த தகவல்கள் விரைவில் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா கூறினார்.

கர்ப்பிணிகளுக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிகிச்சையளிக்க, ஒரு குறிப்பிட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ நெறிமுறை தேவைப்படுகிறது என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.