`பாக் லா`-வை முன்மாதிரியாகக் கொண்டு, முஹைதீன் பதவி விலக வேண்டும் – இப்ராஹிம்

2009-ல், முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மத் படாவி செய்ததைப் போல, கெளரவமாகப் பதவி விலகுமாறு பிரதமர் முஹைதீன் யாசினைப் புத்ரா கட்சியின் தலைவர் இப்ராஹிம் அலி கேட்டுக்கொண்டார்.

அம்னோ அவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து, முஹைதீன் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதால், அவர் பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்று இப்ராஹிம் கூறினார்.

“பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள், பெயர் கூட வரலாற்றில் ஏற்கனவே 8-வது பிரதமராக வந்து விட்டது. பிறகென்ன?

“முஹைதீன் பெரிய மனம் கொண்டவராகவும், தேசியவாதியாகவும் இருந்தால், அரசியல் நெருக்கடி, அரசியலமைப்பு நெருக்கடி, மக்கள் மதிப்பீடுகளின் நெருக்கடி ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மாட்சிமை தங்கியப் பேரரசர் அடுத்த முடிவெடுப்பதற்கும் வழிவிட்டு, அவர் மரியாதையுடன் பதவி விலக வேண்டும்.

“2008 பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியின் கடுமையான தோல்வியின் காரணமாக, 5-வது பிரதமராக இருந்த துன் அப்துல்லா படாவி, பலரின் வலியுறுத்தல்களுக்குச் செவி சாய்த்து, கெளரவமாக பதவி விலகியது போன்று, முஹைதீனும் மரியாதையான முறையில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.