நடப்பு அரசியல் சூழலில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார்.
மலாய் சமூகத்தின் மாபெரும் கட்சியான அம்னோவின் ஆதரவைத் தேசிய கூட்டணி அரசாங்கமும் பிரதமரும் இழந்துள்ளார். ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை. இந்த சூழலில் பிரதமர் பதவியில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் வெகுநாட்களாக நீடிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் அவசரநிலையை மாமன்னர் பிரதமரின் ஆலோசனையின் பேரில் கொண்டு வந்தார். இந்த நடவடிக்கையானது நாடாளுமன்ற கூடாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டதாகும். அவசரநிலை நாட்டில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் தற்போது கோவிட் 19 தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. பிரதமர் அவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு தாமாக முன்வந்து பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
பிரதமர் பதவியை முஹிடின் ராஜினாமா செய்யாத பட்சத்தில் கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வழிவகை செய்யப்படும் என குலசேகரன் தெரிவித்தார்.