கடந்த ஒன்பது நாட்களாக, ரவுப்பில் சர்ச்சையாக இருந்த 15,000 முசாங் கிங் டுரியான் மரங்களை வெட்டி சாய்த்த பஹாங் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையை, டுரியான் விவசாயிகள் குழு ‘ஆணவம்’ என்று வர்ணித்து, கண்டனம் தெரிவித்தது.
முசாங் கிங்’கைக் காப்பாற்றுங்கள் கூட்டணியின் (Save Musang King Alliance – சாம்கா) தலைவர் வில்சன் சாங், பஹாங் வனவியல் துறை அமலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கை விவசாயிகளின் சிரமங்களை அதிகரித்துள்ளது என ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“பஹாங் வனவியல் துறையின் பார்வையில், 15,000 டுரியான் மரங்கள் வெறும் எண்ணிக்கை மட்டுமே.
“ஆனால், இந்த மரங்கள் தோட்டக்காரர்களின் வாழ்வாதாரத்திற்கான ஒரே ஆதாரமாக இருக்கின்றன, தொற்றுநோய் காலத்தில், பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே நம்பிக்கை அவைதான்.
“மேலும், அடுத்த இரண்டு வாரங்களில், 250 ஹெக்டர் நிலத்தை உள்ளடக்கிய நில அழிப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழலில் கடுமையான மற்றும் மீளமுடியாதத் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
“ஆகையால், வனத்துறையினரால் ‘சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்’ என்று கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று சாங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிஎச் ஆன்லைன் (BH Online), 15,000 முசாங் கிங் டுரியான் மரங்களை வெட்டி சாய்த்த நடவடிக்கையின் வெற்றியை, ஆரம்பத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, எதிர்பாராத சாதனை என்று பஹாங் மாநில வனத்துறையின் தலைமை உதவி இயக்குநர் (அமலாக்கப் பிரிவு) நோர் அஸிரிம் அஹ்மட் விவரித்ததாகக் கூறியது.
“ஒன்பது நாட்களுக்குள், பத்து தாலாம் வனப்பகுதியில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட 15,000 முசாங் கிங் டுரியான் மரங்கள் வெற்றிகரமாக வெட்டப்பட்டன.
“ஆரம்ப கட்டத்தில், இதற்கு ஒரு மாதம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
“இந்தச் சாதனை அனைத்து தரப்பினருக்கும் பெருமை அளிக்கிறது, குறிப்பாக இவ்வளவு குறுகிய காலத்தில் பணியை முடிக்க முடிந்ததால்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பஹாங் மாநில அரசும் டுரியான் விவசாயிகளின் குழுவும், ரவூப்பில் அந்நிலம் தொடர்பான தகராற்றில் சிக்கி, வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டுச் சென்றனர்.
விவசாயிகள் நிலத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், டுரியான் மரத் தோட்டத்தை உருவாக்கத் திட்டமிட்ட ஒரு நிறுவனத்திற்கு, அந்நிலத்தைக் குத்தகைக்கு விட, அவர்களை வெளியேற்ற முயற்சித்ததாகவும் மாநில அரசு கூறியது.
ராயல் பஹாங் டுரியான் ரிசோர்சஸ்-பி.கே.பி.பி சென். பெர். (ஆர்.பி.டி.ஆர்-பி.கே.பி.பி.) என்ற அந்நிறுவனம், மாநில அரசுக்கும் பஹாங் அரசக் குடும்பத்துடன் உறவு வைத்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.
விவசாயிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவைப் பெற்றனர், இது வெளியேற்றத்திற்கு எதிராக மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், நிலத்தில் தொடர்ந்து பயிரிட அனுமதித்தது.
இருப்பினும், இந்த மாதத் தொடக்கத்தில், மாநில அரசு இப்பகுதியில் உள்ள டுரியான் மரங்களை வெட்டத் தொடங்கியது.
வெட்டப்பட்ட டுரியான் மரங்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் இல்லை, ஆனால் அருகிலுள்ள வனக் காப்பகத்தில் நடப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மறுபுறம், டுரியான் மரங்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் ஒத்திவைப்பு முடிவும் வனப்பகுதியில் உள்ள மரங்களை உள்ளடக்கியது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பைத் தாக்கல் செய்வதன் மூலம், மாநில அரசு மீது சாம்கா சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று சாங் கூறினார்.
டுரியான் மரங்களை வெட்டுவதற்கான செயல்முறை, ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியது என்று சாங் முன்பு கூறியிருந்தார்.
அதற்கு ஒருநாள் முன்னதாக, மாநில அமலாக்க அதிகாரிகளுடன் மோதல்களில் ஈடுபட்டதற்காக, த்ராஸ் சட்டமன்ற உறுப்பினர் சோவ் யூ ஹுய்-உடன், 18 டுரியான் விவசாயிகளைப் போலீசார் கைது செய்தனர்.