கிள்ளான் பள்ளத்தாக்கில், புதியக் கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பதற்கு, டெல்டா மாறுபாடுகளின் பரவலே காரணம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மோசமான நிலையில் இருக்கும் ஒவ்வொரு நோயாளியும், சராசரியாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் உள்ளனர்.
கிள்ளான் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதற்கான வளங்களை அரசாங்கம் தேடுகையில், நேர்வுகளை வீழ்த்துவதற்கான ஒரே வழி, அதிக சோதனைகளை மேற்கொள்வதும், குறைந்த ஆபத்துள்ள நேர்மறை நேர்வுகளை தனிமைப்படுத்துவதுமாகும் என்றார் நூர் ஹிஷாம்.
கூடுதலாக, தடுப்பூசி விகிதத்தை விரைவில் 40 விழுக்காடு அடைவதுமாகும்.
ஜூன் 1-ம் தேதி முதல், நாம் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) நடைமுறைப்படுத்தினோம், 10 நாட்களுக்குள் புதிய நேர்வுகளை 9,020-லிருந்து 5,000 மற்றும் 4,000 -ஆக சமன் செய்ய முடிந்தது.
“ஆனால், இப்போது அது மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த அதிகரிப்பின் காரணிகளில் ஒன்று கோவிட் -19 மாறுபாடு காரணமாகும்.
“இப்போது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மாறுபாடு […], மிக வேகமாக பரவுகிறது,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
டெல்டா வகைகளில் ஐந்து முதல் எட்டு வரை தொற்று விகிதம் (ஆர்டி) இருப்பதாக அறியப்படுகிறது. நோய்த்தொற்றுக்குள்ளான ஒவ்வொரு 100 பேரும், மேலும் 800 பேருக்கு தொற்றப் பரப்பக்கூடிய திறன் கொண்டுள்ளனர் எனப் பொருள்படும்.
“நமது நேர்மறை நேர்வுகளில் 80 விழுக்காடு வகை ஒன்று (அறிகுறிகள் இல்லை) அல்லது வகை இரண்டு (இலேசான அறிகுறிகள்) சார்ந்தவர்கள்.
“நம்மால் அவர்களைத் தனிமைப்படுத்த முடிந்தால், சமூகத் தொற்றுநோயைக் குறைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.