அம்னோ தேர்தல் இயக்குநராக மாட் ஹசான் நியமிக்கப்பட்டார்

கட்சியின் புதியத் தேர்தல் இயக்குநராக தாஜுட்டின் அப்துல் இரஹ்மானுக்குப் பதிலாக, அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசானை நியமிப்பதாக அம்னோ அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தை அறிவித்த அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகச் சொன்னார்.

“அம்னோ தேர்தல் துறையின் மறுசீரமைப்பு என்பது கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும், அடிமட்டத்திலும் அமைப்பை வலுப்படுத்துவதாகும்,” என்று அவர் கூறினார்.

ஆரம்பத்தில், கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, கட்சியின் அந்த முக்கியப் பதவிக்கு தாஜுட்டின் நியமிக்கப்பட்டபோது, அஹ்மத் ஜாஹிட்டின் நம்பிக்கைக்குரிய நபராக அவர் காணப்பட்டார்.

முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, பிரதமராக நியமிக்க பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமை ஆதரிப்பதன் மூலம், அம்னோ ஒன்றாக வேலை செய்ய விரும்புவதாக வதந்திகள் வந்தபோது அது நடந்தது.

எவ்வாறாயினும், ஜூலை 8-ம் தேதி, முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான கட்சியின் நிலைப்பாட்டை பாகான் லத்தோ எம்.பி. அறிவித்ததை அடுத்து, தாஜுட்டின் அஹ்மத் ஜாஹிதுடன் உடன்படவில்லை என்பதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார்.

துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட அவர்களின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை வாழ்த்தாத அம்னோவின் உயர்மட்டத் தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அந்த பாசீர் சாலாக் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

அஹ்மத் ஜாஹித்தின் கூற்றுப்படி, கட்சியில் முடிவெடுக்கும் செயல்முறையை எளிதாக்க அம்னோ புதிய நியமனங்களைச் செய்துள்ளது.

“தேசிய முன்னணியின் துணைத் தலைவராக மொஹமட் இருப்பதால், அனைத்து உறுப்புக் கட்சிகளும் சம்பந்தப்பட்ட தேர்தல் ஏற்பாடுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் செயல்முறைக்கு இது உதவும்,” என்று அவர் கூறினார்.