பாஸ் ஆதரவாளர்கள் மன்றத்தின் (டி.எச்.பி.பி.) மத்திய மகளிர் தலைவர் ஆர் குமுதா, 42, கோவிட் -19 தொற்று காரணமாக இறந்தார்.
இன்று பிற்பகல், புத்ராஜெயா மருத்துவமனையில் அவரின் இறுதி மூச்சு நின்றது.
டி.எச்.பி.பி.-யின் தலைவர் டாக்டர் என் பாலசுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
“குமாரி குமுதாவின் மரணம், பாஸ் ஆதரவாளர்கள் மன்றத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் ஒரு தீவிரமான, உறுதியான நபர்.
“கோவிட் -19 தொற்று நேர்மறையாக இருந்ததால், ஜூன் 30, 2021 முதல் புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, ஐ.சி.யூ.வில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும், இன்று பிற்பகல் அவரது மூச்சு நின்றது.
“அவரது இழப்பு பாஸ் கட்சியில் உள்ள அனைவராலும், குறிப்பாக அவருடன் போராட்டத்தில் இணைந்திருந்தவர்களால் பெரிதும் உணரப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
குமுதா நியூகாசல், நார்த்தும்ப்ரியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். 2007 முதல், பாஸ் கட்சியில் மிகவும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தார்.
இப்போது டி.எச்.பி.பி. என அழைக்கப்படும் பாஸ் ஆதரவாளர்கள் மன்ற நிறுவனர்களில் அவரும் ஒருவராவார்.
இது தவிர, 2008 பொதுத் தேர்தலில், ஜொகூர், தீராம் சட்டமன்றத் தொகுதியில், பாஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட முதல் முஸ்லிம் அல்லாத வேட்பாளரும் அவராவார்.
2013 மற்றும் 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களிலும், பாஸ் கட்சி வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.