‘பிரதமர் பதவி விலக வேண்டும்’ உட்பட, 5 கோரிக்கைகளை வைத்து மாணவர்கள் பிரச்சாரம்

முஹைதீன் யாசின், பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது உட்பட, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, சில மாணவர் குழுக்கள் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளன.

கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதில், பாகோ எம்.பி. நாட்டை வழிநடத்த தவறிவிட்டார் என்ற அடிப்படையில் இந்த வலியுறுத்தல் செய்யப்பட்டது.

தங்கள் கூட்டணியை மார்ஹேன் மாணவர் செயலகம் (எஸ்.எம்.எம்.) என்று பெயரிட்டுள்ள அந்தப் பதினைந்து குழுக்கள், சமூக ஊடகங்களில் தங்கள் பிரச்சாரங்களை பெறுமளவில் பரப்புவது கண்டறியப்பட்டது.

மலேசிய முஸ்லீம் மாணவர்களின் தேசியச் சங்கத்தின் (பி.கே.பி.ஐ.எம்.) தலைவரான, ஃபர்ஹான் ரோஸ்லி, 25, “முடிவில்லாமல் தொடரும் மாணவர் பிரச்சினைகளைத் தொடர்ந்து” இந்தப் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக (யுஐஏ) சட்டத்துறை பட்டதாரியுமான அவர், இந்தப் பிரச்சாரம் மாணவர்களின் செய்தியை ‘வெள்ளை கொடி’ மற்றும் ‘கருப்புக் கொடி’ பிரச்சாரங்கள் போன்ற பிற இயக்கங்களுடன் கொண்டு வந்தது என்றும் கூறினார்.

தொற்றுநோய் காலகட்டத்தில், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு வசதியாக வெள்ளைக் கொடி பிரச்சாரம் அணிதிரட்டப்பட்டது, அதே நேரத்தில் கருப்புக் கொடி, அரசாங்கத்தின் “தோல்விக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாக இருந்தது.

இது தவிர, பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்கவும், மாணவர்கள் மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கவும், அத்துடன் “குமிழி உத்தி” அறிமுகப்படுத்தவும், தொழிற்சாலை துறையை மூடவும் எஸ்.எம்.எம். அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

“தொழிற்சாலை தொழிலாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் உத்தியைச் செயல்படுத்த அல்லது கோவிட் -19 பரவுவதைத் தடுக்க அனைத்து தொழிற்சாலைகளையும் தொடர்ந்து மூடுவதற்கு மிட்டிக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம், மிட்டியின் அமைச்சர் இப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறினால், அவர் இராஜினாமா செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அரசியல்வாதிகளை அவர்களின் நாடகத்தையும் அதிகாரப் போராட்டத்தையும் நிறுத்துமாறும் எஸ்.எம்.எம். அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில், ஜூன் 30-ம் தேதி, உயர்க்கல்வி அமைச்சைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்ததாக ஃபர்ஹான் சொன்னார்.

“இருப்பினும், மாணவர்களின் நலன் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தப்பட்ட பல சிக்கல்கள் அரசாங்கத்தால் சரியாக கையாளப்படவில்லை.

“எனவே, இதன் விளைவாக #சிஸ்வாமிந்தா5 (#SiswaMinta5) மூலம், தீர்வு வரும்வரை அழுத்தத்தை நாங்கள் தொடர உள்ளோம்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது ஃபர்ஹான் கூறினார்.