ரவூப்பில், பாரம்பரிய டுரியான் விவசாயிகளால் பயிரிடப்பட்ட 15,000 டுரியான் மரங்களை வெட்டிச்சாய்த்த பஹாங் வனத்துறையின் நடவடிக்கைக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ராயல் பஹாங் டுரியான் ரிசோர்சஸ் பி.கே.பி.பி. சென். பெர். (ஆர்.பி.டி.ஆர்-பி.கே.பி.பி.) தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில், “சில தரப்பினரால்” எறியப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தகுந்த நேரத்தில் தீர்ப்போம் என்றும் அந்நிறுவனம் கூறியது.
“சில தரப்பினர் ஆர்.பி.டி.ஆர்-பி.கே.பி.பி.-க்கு எதிராக குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர். எங்களை அவமதிக்கவும் அவதூறு செய்யவும் விரும்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்,” என்று அது நேற்று ஓர் அறிக்கையில் கூறியது.
மாநில இருப்பு நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி, ரவூப் புக்கிட் தாலாம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சுமார் 250 ஏக்கர் (101 ஹெக்டேர்) டுரியான் பழத்தோட்டத்தில், 15,000 முசாங் கிங் மரங்களை, ஒன்பது நாட்களுக்குள் பஹாங் வனத்துறை வெட்டி அகற்றியதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆர்பிடிஆர்-பி.கே.பி.பி. உடனான நிலத் தகராறில் சிக்கியுள்ள ‘மூசாங் கிங்’கைப் பாதுகாப்போம் கூட்டணி’ (Save Musang King Alliance – சாம்கா) விவசாயிகள், தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், அமலாக்க அதிகாரிகளின் மூர்க்கத் தனமான நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
த்ராஸ் சட்டமன்ற உறுப்பினர் சோவ் யூ ஹுய், நேற்று அமலாக்க அதிகாரிகளின் அந்த நடவடிக்கையைப் “பாசாங்குத்தனம்” என்று கண்டித்தார், மேலும் 1,213 ஹெக்டேர் நிலத்தை ஆர்.பி.டி.ஆர்-பி.கே.பி.பி.-க்கு வாடகைக்கு விட்டபோது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து அவர்கள் சிந்திக்கவில்லையா என்று கேட்டார்.
“மாநில அரசு விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர்கள் பயிரிட்டிருந்த நிலத்தை அழித்தது.
“நிலத்தைச் சுத்தம் செய்வதற்காகச், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாக சாக்குப்போக்கு சொல்லி, மாநில அரசு பாசாங்கு செய்கிறது,” என்று சோவ் கூறினார்.
இதற்கிடையில், ஆர்.பி.டி.ஆர்-பி.கே.பி.பி., அதன் திட்டத்திற்கான பொருத்தமான சட்டங்களுடன் இணங்குவதாகவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கையின் ஒப்புதல் உட்பட, கூட்டாட்சி மற்றும் மாநில ஒப்புதல்களைப் பெற்றுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளது.
“ஒரு குழுவாக, அனைத்து விதிகளையும் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம், நாங்கள் தொடர்ந்து அதனைக் கடைபிடிப்போம்,” என்று அது கூறியது.
சம்காவின் குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, மாநில அரசாங்கத்தால் சுத்தம் செய்யப்பட்ட அந்நிலம், தற்போது சிக்கலில் இருக்கும் நிலம் அல்ல என்ற பஹாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறியதையும் அந்நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது.
அழிக்கப்பட்ட மரங்கள், சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒரு பகுதி என்றும், அவமதிப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாகவும் சம்கா கூறியுள்ளது.