டிஏபி : ‘எங்களுக்கு அரசாங்கத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லை’

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்துடன், நம்பிக்கை மற்றும் பட்ஜெட் ஒப்பந்தம் (சிஎஸ்ஏ) உள்ளிட்ட எந்த உடன்படிக்கையும் செய்யப்படவில்லை என்று டிஏபி உதவித்  தலைவர் எம் குலசேகரன் தெரிவித்தார்.

எனவே, டிஏபியை இழுப்பதற்கான அம்னோவின் எந்தவொரு முயற்சியும், அக்கட்சி உள் பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

“நாட்டில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. அவர்கள் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் டிஏபி, பிஎன்-ஐ ஆதரிக்கும் என்று கூறுகின்றனர்.

“இது ஒருபோதும் நடக்காது,” என்று அவர் கூறினார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் இரஹ்மான், ஒரு குரல் பதிவில், அம்னோ தனது ஆதரவைத் திரும்பப் பெற்றாலும், பிஎன் அரசாங்கம் வீழ்ச்சியடையாது என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தால், டிஏபியின் ஆதரவைப் பெற முடியும் என்றார் அவர்.

பிரதமர் முஹைதின் யாசினுக்கான ஆதரவை, அம்னோ திரும்பப் பெற்றது, ஆனால் அதன் எம்.பி.க்கள் மக்களவை வாக்களிப்பின் போது தங்களது சொந்த முடிவை எடுக்க அனுமதித்தது.

எதிர்க்கட்சி வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்காது, நம்பிக்கையற்ற வாக்கெடுப்பை முன்மொழியாது, பதிலுக்கு, பிரதமர் எதிர்க்கட்சியினர் தங்கள் கொள்கையை முன்மொழிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற சமரசத்தை அது குறிப்பிட்டது.

இதற்கிடையில், ஈப்போ பாராட் எம்.பி.யுமான குலசேகரன், தாஜுடினுக்கு இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சவால் விடுத்தார்.

பி.எச்.-இன் மூன்று முக்கியத் தலைவர்கள் – அன்வர் இப்ராஹிம் (பி.கே.ஆர்), லிம் குவான் எங் (டிஏபி) மற்றும் முகமது சாபு (அமானா) – முஹைதீனுடன் எந்த ஒத்துழைப்பும் இல்லை என்று தெளிவாகக் கூறியதாக அவர் சொன்னார்.

“அவர்கள் உடனடியாக இராஜினாமா செய்ய முஹைதீனை வலியுறுத்தினர்.

“இது போன்ற ஒரு சூழ்நிலையில், டிஏபி பி.என்.-உடன் ஒத்துழைப்பது அல்லது முஹைதீனை ஆதரிப்பது என்ற தர்க்கம் எதற்காக,” என்று அவர் கூறினார்.