2021, மே 16 முதல், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்ட போதிலும், தினசரி கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்து வருவதற்குப் பொறுப்பேற்று, சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா பதவி விலக வேண்டுமென்று, டாமான்சாரா எம்.பி. டோனி புவா கேட்டுக் கொண்டார்.
“எட்டு வாரங்களுக்கும் மேலாக, நாடு நடமாட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது, ஆனால் நாட்டில், கோவிட் -19 நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாததாகவே உள்ளது.
“நடமாட்டக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட பின்னர், கிருமி தானாக மறைந்துவிடும் என்று ஆதாம் நம்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று புவா இன்று காலை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) தற்போது 972 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 456 பேருக்குச் சுவாச உதவி தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.
மேலும் 125 இறப்புகள் பதிவாகி, மொத்த இறப்பு எண்ணிக்கை 6,385 ஆக உள்ளது.
எட்டு வாரங்களுக்கும் மேலாக, மக்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருகின்றனர், வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, விரைவில் முந்தைய நிலைக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்தி வருகின்றனர் என்று புவா கூறினார்.
“இருப்பினும், ஆதாமும் தேசியக் கூட்டணி அரசாங்கமும், நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் கிருமி பரவுவதைத் தடுப்பதில் தங்கள் பங்கைச் செய்யத் தவறிவிட்டனர், மக்களின் தியாகங்களை முற்றிலுமாக அழித்துவிட்டனர்.
“நிலையான நிகழ்வுகளில், வாராந்திர சோதனை நேர்மறை விகிதம் பி.கே.பி. காலம் முழுவதும் அதிகரித்துள்ளது, ஜூன் 6 முதல் 12 வாரங்களில், ஆகக் குறைந்ததாக 6.61 விழுக்காடு இருந்தது.
“உலகச் சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஐந்து விழுக்காட்டிற்கும் மேலான நேர்மறை விகிதம் இருந்தால், பொருளாதார மற்றும் சமூகத் துறைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று புவா மேலும் கூறினார்.