பிரதமர் பதவியில் இருந்து “கெளரவமாக” விலகுமாறு, அம்னோ முஹைதீன் யாசினைக் கேட்டுக்கொண்ட ஒரு வாரத்திற்குள், இன்று அமைச்சரவை – அம்னோ எம்.பி.க்களை உள்ளடக்கிய – அந்த பெர்சத்து தலைவருக்கு தங்களது முழு ஆதரவை வெளிப்படுத்தியது.
இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒருமனதாக முஹைதீனுக்கான முழு ஆதரவோடு இருந்தது என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.
“இந்த நேரத்தில் அரசாங்கத்தின் முன்னுரிமை, தேசிய மீட்புத் திட்டத்தை (பிபிஎன்) மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் செழிப்புக்கு வெற்றிகரமாக செயல்படுத்துவதோடு, கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதாக இருக்க வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஜூலை 8-ம் தேதி, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, முஹைதீனுக்கு அளித்த ஆதரவை உடனடியாக திரும்பப் பெற, கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் ஏழு தோல்விகளின் அடிப்படையில், அம்னோ உச்சமன்றம் இந்த முடிவை எடுத்ததாக அஹ்மத் ஜாஹித் கூறினார்.
எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க அனுமதிக்கும் வகையில், முஹைதீன் மரியாதையுடன் பதவிவிலக வேண்டுமென்று அந்தப் பாகான் டத்தோ எம்.பி. கூறியிருந்தார்.
தேசியக் கூட்டணியில் சேர வேண்டாம் என்று அம்னோவின் நிலைப்பாடு இருந்தபோதிலும், அவர்களது எம்.பி.க்களில் ஒன்பது பேர் முஹைதீனின் அமைச்சரவையில் சேர்கின்றனர், அவர்களில் ஒருவரான இஸ்மாயில் சப்ரி யாகோப், துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் இணைந்த மற்ற எட்டு அம்னோ எம்.பி.க்கள் :-
- அன்னுவார் மூசா (கெத்தெரே)
- ஷம்சுல் அனுவார் நசரா (லெங்கோங்)
- நோரைய்னி அஹ்மத் (பாரிட் சுலோங்)
- ரீஸால் மெரிக்கான் நைனா மெரிக்கான் (கெபாலா பத்தாஸ்)
- ஹிஷாமுடின் ஹுசே (செம்ப்ரோங்)
- கைரி ஜமாலுடின் (ரெம்பாவ்)
- ஹலிமா முகமது சாதிக் (கோத்த திங்கி)
- டாக்டர் ஆதாம் பாபா (தெங்காராகு)
அம்னோவைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரி துணைப் பிரதமராகவும்; ஹிஷாமுடின் மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
அதனால், அம்னோ எம்.பி.க்களில் சிலர், கடந்த வாரம் அம்னோ உச்சமன்றம் எடுத்த நிலைப்பாட்டிற்கும் முடிவிற்கும் இணங்கவில்லை என்பதையும் இது காட்டுகிறது.
அமைச்சரவையின் கூற்றுப்படி, ஒவ்வொரு அரசாங்க முடிவும் கூட்டாகவும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுகிறது.
இருப்பினும், கட்சியின் நிலைப்பாட்டைப் பின்பற்ற மறுத்து, முஹைதீனுக்குத் தொடர்ந்து ஆதரவளித்த அம்னோ எம்.பி.க்களின் உண்மையான எண்ணிக்கை இதுவரை கண்டறியப்படவில்லை.
தற்போது, விமர்சகர்கள் முஹைதீன் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறுகின்றனர், ஆனால் உண்மையான நிலைப்பாடு – அல்லது நேர்மாறாக – நாடாளுமன்றத்தில் இன்னும் சோதிக்கப்படவில்லை.