கட்டம் 2 நிலையில் இருந்து, மீண்டும் கட்டம் 1-க்கு நகராது – ஜஃப்ருல்

தேசியப் புனர்வாழ்வு திட்டத்தில் (பிபிஎன்) நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வரும் மாநிலங்கள், மீண்டும் முதலாம் கட்டத்திற்குப் ‘பின்வாங்காது’ என்று பிபிஎன் ஒருங்கிணைப்பு அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

நிதியமைச்சருமான அவர், ஒரு மாநிலத்தை ‘திறந்து மூடுவது’ என்பது நிலையானது அல்ல என்றும், மக்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்குப் பிபிஎன் ஒரு சிறப்பு திட்டமிடலாகும் என்றும் கூறினார்.

“நிலை மாற்றப்பட்ட மாநிலங்களில், கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சில இடங்கள் அல்லது பகுதிகள் மட்டுமே இறுக்கமான இயக்கக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பிகேபிடி) உட்படுத்தப்படும், முழு மாநிலமும் அல்ல.

“நாம் படிப்படியாக பிபிஎன்-இன் முதல் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு மீண்டு வந்தால், நாம் முதலாம் கட்டத்திற்குச் சென்று இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல முடியாது. இரண்டாம் கட்டத்திற்குச் சென்றதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது இருப்பிடத்தில் நேர்வுகள் (கோவிட்-19) இருந்தால், அது மூடப்படும் அல்லது பிகேபிடி-க்கு உட்படுத்தப்படும், முழு மாநிலமும் அல்ல,” என்று அவர், புத்ராஜெயாவில், செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்லிஸ், பேராக், பஹாங், கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, சபா மற்றும் சரவாக் ஆகிய எட்டு மாநிலங்கள், இதுவரை பிபிஎன் -இன் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளன.

மற்ற மாநிலங்களும், இதனைப் பின்பற்றி இரண்டாம் கட்டத்திற்கும், பின்னர் மூன்றாம் கட்டத்திற்கும் செல்லும் என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, பி.கே.பி.டி. பகுதிகளில் செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மேம்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் ‘அத்தியாவசிய’ பிரிவில் உள்ள சில தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த வாரம் பல அரசியல் கட்சிகள் மற்றும் பங்குதாரர்களுடன் பிபிஎன் தொடர்பான ஓர் அமர்வை நடத்தியதாகவும், எதிர்காலத்தில் அந்த அமர்வு தொடரும் என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

அந்த அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் பல்வேறு உள்ளீடுகள் பெறப்பட்டதாகவும் அவர் சொன்னார். குறிப்பாக, சுகாதார அம்சங்கள் மற்றும் பி.கே.பி.டி. பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொடர்பாக பேசப்பட்டது என்றார் அவர்.