மலேசியாவின் பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றான கோலாலம்பூர் மருத்துவமனை (எச்.கே.எல்.), தற்போது அங்குள்ள மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க மருத்துவரல்லாதத் தன்னார்வலர்களைத் தேடுகிறது.
மலேசிய முதலுதவி அமைப்பு (மைஃபாஸ்ட்), தற்போது அதிகரித்து வரும் நோயாளிகளின் சேர்க்கையைச் சமாளிக்க, மருத்துவ ஊழியர்கள் போராடி வருவதால் மருத்துவமனை தங்களிடம் உதவி கோரியதாக தெரிவித்துள்ளது.
“தற்போது அதிகப்படியான பணிச்சுமையுடன் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு உதவ தன்னார்வலர்களின் உதவியைக் கேட்டு மைஃபாஸ்டுக்கு எச்.கே.எல். கடிதம் அனுப்பியுள்ளது.
“#கீத்தாஜாகாகீத்தா விழிப்புணர்வு குறித்து, ஆர்வமுள்ள அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம், எச்.கே.எல். ஊழியர்களுக்கு உதவும் வகையில், அங்கு மருத்துவமற்ற கடமைகளைச் செய்ய, நேரம் இருப்பவர்களை நாங்கள் அழைக்கிறோம்,” என்று அது ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தது.
மைஃபாஸ்ட்டின் கூற்றுப்படி, தன்னார்வலர்களுக்கானப் பணிகளில் நோயாளிகளை வார்டுக்கு அனுப்புவது, நோயாளியின் உயிர்வளி விநியோகத்தை மாற்றுவது, நோயாளியின் நிலை குறித்த முக்கியமானத் தகவல்களைப் பதிவுசெய்தல் மற்றும் அவர்களுக்கு உணவை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
பணிகள் தொடங்குவதற்கு முன் அனைத்து தன்னார்வலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
தொடர்பு கொண்டபோது, அத்தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களின் சேவைக்குப் பணம் செலுத்தப்படாது என்று மைஃபாஸ்ட் சொன்னது.
“சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களின் பெயர்கள், கொடுப்பனவுக்காகப் பரிசீலிக்கச் சுகாதார அமைச்சிடம் வழங்கப்படும்,” என்றும் அது கூறியது.