பிரதமர் வேட்பாளராக அஸ்மினா? நான் மக்களின் கருத்தைச் சொன்னேன் – மகாதீர்

சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலி தனது விருப்பமான பிரதமர் வேட்பாளர் அல்ல என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது விளக்கினார்.

மாறாக, தன்னிடம் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை என்று அந்த லங்காவி எம்.பி. சொன்னார்.

நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கந்தார், புதன்கிழமை இரவு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் வேட்பாளர்களாக அஸ்மினையும் அவரது மகன் முக்ரிஸையும் தேர்வு செய்ததாக வெளியான ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து மகாதீர் இவ்வாறு கூறினார்.

“நான் எந்தப் பெயரையும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், சொல்லிதான் ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர், ​​நான் அஸ்மினுடன் நல்ல உறவில் இருப்பதால், அஸ்மின் எனது வேட்பாளர் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.

“(ஆனால்) … அவர் எனது வேட்பாளர் அல்ல. இது மக்கள் கருத்து என்று நான் சொல்கிறேன், அதாவது, பிரதமராக அஸ்மின் தகுதி பெற்றவர் என,” என்று அவர் இன்று ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அந்தப் பெஜுவாங் கட்சித் தலைவர் மேலும் கூறுகையில், மூன்று பெயர்களைப் பிரதமர் வேட்பாளர்களாகக் குறிப்பிடுமாறு கேட்டபோது, ஜெர்லுன் எம்.பி.யான முக்ரிஸின் பெயரையும் குறிப்பிட வேண்டி வந்ததாகக் கூறினார்.

“அவர் (ஹரித்) மூன்று பெயர்களை விரும்பினார், நான் என்ன சொல்வது என்று தெரியாத நிலையில், அவர்களில் ஒருவர் முக்ரிஸ் என குறிப்பிட வேண்டியிருந்தது,” என்று மகாதீர் சொன்னார்.