சடலக் கொள்கலன் கேட்டு செலாயாங் மருத்துவமனை முறையீடு

தற்போது கோவிட் -19 இறப்புகள் அதிகரித்து வருவதால், உடல்கள் வைக்க இடப் பற்றாக்குறை நிலவி வருகிறது என்ற சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் குற்றச்சாட்டுக்குச் சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.) பதிலளிக்கும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இந்த விஷயத்தைத் தெரிவித்ததாகச் உத்துசான் ஆன்லைன் தெரிவித்தது.

முன்னதாக, உத்துசான் ஆன்லைன், உள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, கோவிட் -19 தொற்று காரணமாக அதிகரித்து வரும் இறப்புகளுக்கு இடமளிக்க மருத்துவமனையில் போதிய இடம் இல்லை என்று கூறியது.

உடல்களை வைக்க கொள்கலன் கோரும் முறையீட்டையும் அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

“கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை பெற்ற புதியக் கொள்கலனைப் போல் நாங்களும் விண்ணப்பித்தோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் ஊழியர் சொன்னார்.

“புதியக் கொள்கலன்களுக்கு ஒதுக்கீடு இல்லாததால், டிசம்பர் வரை காத்திருக்க வேண்டி வரும் போல் தெரிகிறது.

“இருப்பினும், அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஓ) பங்களிப்பு இருந்தால் அது விரைவில் நடக்கலாம்,” என்று அவர் கூறினார்.

மருத்துவமனையின் தடயவியல் பிரிவு, இரண்டு உடல்களை ஒன்றாக பெட்டிக்குள் வைப்பது உட்பட, பல்வேறு விஷயங்களைச் செய்ய வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது என்றும் அந்த வட்டாரம் கூறியது.

“இன்று காலை, 47 உடல்களைப் பெற்றோம், அவற்றில் கோவிட்-19 அல்லாத 16 உடல்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோம்.

கூடுதலாக, 24 கோவிட் -19 நேர்மறை உடல்கள் கொள்கலன்கள், சவப்பெட்டிகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறைகளில் இருக்கின்றன.

“சவப்பெட்டியில் வைக்க முடியாதப் பிற உடல்களும் உள்ளன, அவை பிரேதப் பரிசோதனை அறையின் மேசை மீது வைக்கப்பட்டுள்ளன, சில மரத்தாலான தட்டுகளை வரிசையாக தரையில் அடுக்கி, அதன்மீதும் வைக்கப்பட்டுள்ளன,” என்று கூறிய அவர், உடல்கள் வைக்க நன்கொடையாகக் கொள்கலன்கள் விரைவில் வேண்டும் என்றார்.