சரியான நியமனம் இருந்தால் புலம்பெயர்ந்தோரைப் பிபிவி ஏற்றுக்கொள்ள வேண்டும் – கைரி

நாடு முழுவதும் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களும் (பிபிவி), மைசெஜாத்ரா பயன்பாட்டில் சந்திப்பு உறுதிப்படுத்தல் கொண்ட புலம்பெயர்த் தொழிலாளர்களை ஏற்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சாரான அவர், வெளிநாட்டு தொழிலாளர்கள் நியமனம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் சில பிபிவி-களில் அவர்களுக்குத் தடுப்பூசிகள் மறுக்கப்படுவதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

“புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியமனம் கிடைத்தால் அவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்,” என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவுடன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

பொது-தனியார் கூட்டாண்மை தொழில்துறை நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிகாஸ்) மூலம் அவர்களுக்குத் தடுப்பூசி போட தேவையில்லை என்பதையும் கைரி உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் பல புகார்களைப் பெற்றுள்ளோம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து தடுப்பூசி போட பிபிவி நிறுவனங்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோர், தடுப்பூசிக்கு முன்வருவதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, ​​அடுத்த வாரம் உள்துறை அமைச்சு அதனை அமைச்சரவையில் முன்வைக்கும் என்றார் கைரி.

அதன்பிறகு, பாதிக்கப்பட்ட அக்குழுவினருக்குத் தடுப்பூசி போடுவதற்கான முடிவு எடுக்கப்படும் என்றார்.