6 ஆண்டுகளுக்குப் பிறகு, பில் கயோங் கொலைக்கான வேட்டையில் போலிசார்

ஆறு ஆண்டுகளாகப் போலிசாரால் தேடப்பட்டு வந்த, சரவாக் பழங்குடியினரின் பாரம்பரிய நில உரிமை ஆர்வலர் பில் கயோங் கொலையின் சந்தேக நபர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

26 வயதான அந்தச் சந்தேக நபர், கூங் சியாங் மிங் @ பாத்து மிங், கோலாலம்பூரிலிருந்து, நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் மிரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோடு, மேலதிக விசாரணைக்காக மிரி மத்தியக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என டாயாக்டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் பதுங்கி இருந்ததாக நம்பப்படும் கூங், காலாவதியான கடப்பிதழை வைத்திருந்ததால், சீன நாட்டு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவதாக அந்தச் செய்தி அறிக்கை கூறியது.

மொஹமட் ஹஸ்பி அப்துல்லா எனும் இஸ்லாமியப் பெயர் கொண்ட பில் கயோங், 43, டுடான் குறுக்குவழி சாலையான மிரி-கோல பராமில், ஈ-மார்ட் பேரங்காடி அருகே, 2016, ஜூன் 21, காலை 8.20 மணி அளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மிரி பி.கே.ஆர். செயலாளராக இருந்த கயோங்கைக் கொன்றதற்காக, இரவு விடுதி ஒன்றின் ‘பவுன்சர்’ (பாதுகாவலர்), மொஹமட் ஃபித்ரி பாவுஸுக்கு, 2018-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், கியோங்கின் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட லீ சாங் லூன், சின் வுய் சிங் மற்றும் தொழிலதிபர் ஸ்டீஃபன் லீ சீ கியாங் ஆகியோரை, 2017, ஜூன் மாதம் மிரி உயர் நீதிமன்றம் விடுவித்தது.

கயோங்கின் கொலைக்குத் தொடர்புடைய ஆதாரங்களை, முதன்மை வழக்கு காட்ட அரசு தரப்பு தவறியதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.