கிள்ளான் பள்ளத்தாக்கின் மூத்தக் குடிமக்கள் சந்திப்பு நியமனம் இல்லாமல் தடுப்பூசி பெறலாம்

இன்று தொடங்கி, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள், எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் (பிபிவி), சந்திப்புக்கான நியமனம் இல்லாமலேயேக் கோவிட் -19 தடுப்பூசி பெறலாம் என்று தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

கோவிட் -19 தடுப்பூசிக்கான சந்திப்பு தேதியை இதுவரை பெறாத வயதானவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை என்றும் அவர் கூறினார்.

“மூத்தக் குடிமக்கள் வழங்கப்பட்ட சிறப்பு வழியைப் பயன்படுத்தி பிபிவி-க்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்,” என்று அவர், நேற்று பிக் வளர்ச்சி குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த விஷயத்தை விரிவாகக் கூறிய கைய்ரி, மூத்தக் குடிமக்கள் மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலமாகவோ அல்லது கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாதச் சிறப்புக் குழுவின் (ஜே.கே.ஜே.ஏ.வி.) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ பதிவு செய்யாவிட்டால், பிபிவி ஊழியர்கள் கைமுறையாகப் பதிவு செய்வார்கள் என்றார்.

இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி நினைவூட்டலுக்காக, தொடர்புகொள்ள வேண்டிய உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் பற்றிய தகவல்களையும் பிபிவி ஊழியர்கள் பெறுவார்கள் என்றார்.

இருப்பினும், நியமன தேதி வழங்கப்பட்ட மூத்தக் குடிமக்களுக்குப் பிபிவிக்கு நேரடியாக தடுப்பூசிகளைப் பெற வர வேண்டாம் என்றும் கைரி நினைவுபடுத்தினார், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்காகக் காத்திருக்க வேண்டும்.

“இந்த ‘வாக்-இன்’ (நேரடி) முறை, நியமனத் தேதி பெறாத மூத்தக் குடிமக்களுக்கு மட்டுமே. மைசெஜாத்ரா மூலம் தேதியைப் பெற்றவர்கள், தயவுசெய்து நிர்ணயிக்கப்பட்ட தேதியைப் பின்பற்றவும். ஆகஸ்ட் 1-க்கு முன்னதாக, அவர்கள் முதல் மருந்தளவைப் பெறுவார்கள் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பிக்-இன் இரண்டாம் கட்டத்தின் மூலம், சுமார் 2.68 மில்லியன் மூத்தக் குடிமக்கள் குறைந்தது ஒரு மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசி பெற்றுள்ளனர், இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களையும், உடற்குறைபாடுகள் உள்ளவர்களையும் தவிர, பிற கோமர்பிட் பிரச்சினைகளால் (ஒருவரிடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கடும் நோய் பாதிப்பு) பாதிக்கப்படக்கூடிய குழுக்களையும் இலக்காகக் கொண்டுள்ளது.

  • பெர்னாமா