கடந்த புதன்கிழமை கூடியிருந்த அமைச்சரவை, ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பண்டார் கூச்சிங் எம்.பி. டாக்டர் கெல்வின் யீ தெரிவித்தார்.
கூட்டத்தில் அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா உறுதியளித்த போதிலும் அது நடக்கவில்லை என்று அவர் கூறினார்.
“இந்த விஷயத்தை அமைச்சரவை விவாதிக்கும் என்பதால், பொறுமையாக இருக்குமாறு ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதாம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
“ஆயினும், இன்றுவரை, சம்பந்தப்பட்ட சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையோ அல்லது உத்தரவாதமோ வரவில்லை, ஒப்பந்த மருத்துவ ஊழியர்களுக்கு நியாயமான தீர்வுகாணக் கோரி, அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
“இவர்களின் பிரச்சனைகளை விவாதிக்காமல், எந்தவொரு விளக்கமும் வழங்காமல், எவ்வாறு அவர்களைப் பொறுமையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கேட்க முடியும்?” என்று ஓர் அறிக்கையில் மருத்துவராக இருக்கும் யீ கேள்வி எழுப்பினார்.
எந்தவொரு தீர்வும் இல்லாமல், அரசாங்கத்தால் இனியும் காரணங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது என்று யீ கூறினார்.
“ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட்டாட்சி பயிற்சி பரிசுக்கு (Hadiah Latihan Persekutuan-எச்.எல்.பி.) விண்ணப்பித்து, முதுகலை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் தங்கள் படிப்புகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது உட்பட, மற்ற மருத்துவ ஊழியர்களைப் போல, அதேப் பணிச்சுமை, பொறுப்புகள் மற்றும் ஆபத்துகள் கொண்ட இவர்களும் அவர்களின் சகாக்களைப் போலவே நன்மைகளை அடைய, அமைச்சரவை உடனடியாகக் கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும்.
“அத்தகைய கொள்கை முடிவுகள் கணிசமான நிதி உறுதிப்பாட்டை ஏற்படுத்தாது, மேலும் இந்தச் சிக்கலை விரிவாகத் தீர்ப்பதற்கான ஒரு நல்ல முதல் படியாக அது அமையலாம்,” என்று அவர் கூறினார்.
அரசு இளைய ஒப்பந்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தங்கள் ஐந்து ஆண்டுகாலப் பயிற்சியை முடித்த பின்னர் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.
அரசாங்க நிதிக் கட்டுப்பாடு காரணமாகப் பொது மருத்துவமனைகளில் நிரந்தர பணியாளர்களுக்கான பற்றாக்குறை உள்ளது.
இதன் விளைவாக, பல ஒப்பந்த மருத்துவர்கள் தனியார் துறைக்கு மாற அல்லது வெளிநாட்டில் தங்கள் நிபுணத்துவப் பயிற்சியைத் தொடர நிர்பந்திக்கப்படுகிறார்கள்.