சினோவேக் தடுப்பூசி பெறுபவர்களுக்கு மூன்றாவது மருந்தளவு பரிசோதனை – முன்னாள் சுகாதார அமைச்சர் பரிந்துரை

கோவிட் -19 சினோவேக் தடுப்பூசி பெறுபவர்களுக்கு ஊட்ட (booster) அளவை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் எஸ் சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்.

“பிற நாடுகளில் பதிவாகும் நோய்த்தொற்றுகள், தடுப்பூசி உத்திகளை மறுபரிசீலனை செய்யக் காரணமாக அமைந்துள்ளன, இதனால் தடுப்பூசிகளைக் கலக்கவும், (தற்போதுள்ள சினோவேக் தடுப்பூசியின்) செயல்திறன் குறைபாடுகளைத் தீர்க்கவும், ஊக்க மருந்துகளை வழங்கவும் முன்மொழியப்பட்டன.

“தடுப்பூசியைக் கலக்கும் முன், கூடுதல் தரவுகளுக்காகக் காத்திருக்கும் அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நான் மதிக்கிறேன், ஆரம்பத்தில் சினோவேக் அளவை அதிகரிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கலாம், ஆரம்பத்தில் இது ஒரு பரிசோதனையாக இருந்தது,” என்று அவர் ஒரு முகநூல் அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட் -19 சினோவாக் தடுப்பூசியின் மீதமுள்ள மருந்தளவு, தற்போதுள்ள சினோவாக் பெறுநர்களுக்கு, இரண்டாவது மருந்தளவாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று நேற்று அரசாங்கம் அறிவித்தது.

அதன் பிறகு, ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசியைக் கோவிட் -19 தடுப்பூசியாக அரசாங்கம் பயன்படுத்தும்.

இந்த நடவடிக்கையானது, சினோவாக் தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்துவதாக அர்த்தப்படாது என்றும், அது தனியார் சந்தை மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அரசாங்கம் கூறியது.

கோவிட் -19 சினோவாக் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில், குறிப்பாக அதிகரித்து வரும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சுப்பிரமணியம் கூறினார்.

“சமீபத்திய மாதங்களில் சிலி மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகள், மிக அதிகமான தடுப்பூசி அளவைக் கொண்டிருந்தாலும் (மக்கள் தொகையில் 65-70 விழுக்காட்டிற்கு இடையில்) கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

“தற்செயலாக, சினோவாக் தடுப்பூசி சிலியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் சினோபார்மா சீஷெல்ஸில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

“ஃபைசர் 92 விழுக்காடு மற்றும் அஸ்ட்ராஸெனெகா 96 விழுக்காடு செயல்திறனுக்கு மாறாக, சினோவாக் 65 விழுக்காடு செயல்திறனை மட்டுமே நோய்த்தொற்றுக்கு எதிராகக் கொண்டுள்ளது என்று பகுப்பாய்வு காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

அப்படியிருந்தும், கோவிட் -19 நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் இறப்பதைத் தடுப்பதில் சினோவாக் இன்னும் 87 விழுக்காடு செயல்திறனைக் கொண்டிருப்பதாக சுப்பிரமணியம் கூறினார்.

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை மற்றும் இறப்புக்கு எதிராக ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஸெனெகா இரண்டும் நல்ல பாதுகாப்பைக் காட்டியுள்ளன என்பதைச் சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன.

“துரதிர்ஷ்டவசமாக, சினோவாக் தடுப்பூசி தொடர்பாக அதிகமான தகவல்கள் கிடைக்கவில்லை, மேலும் டெல்டா வகைகளுக்கு எதிராக அதன் செயல்திறனை அதிகரிக்க மூன்றாவது மருந்தளவு தேவைப்படலாம் என்று சினோவாக் உற்பத்தியில் உள்ள விஞ்ஞானிகள் குழு பரிந்துரைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.