செலாயாங் மருத்துவமனைக்கு உடல் கொள்கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது

இன்று, கோவிட் -19 நோயாளிகளின் உடல்களை வைக்க, தொழிலதிபர் ஒருவர் சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனைக்கு ஒரு சிறப்பு கொள்கலனை நன்கொடையாக வழங்கினார்.

கோவிட் -19 இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக, உடல்களை வைக்க இடமில்லாமல் போனதால், கூடுதல் கொள்கலன்களுக்கு மருத்துவமனை வேண்டுகோள் விடுத்த செய்தியை ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.

ஷா ஆலாமைச் சேர்ந்த என் திருமூர்த்தி, 54, சவக்கிடங்காகப் பயன்படுத்த, RM34,000 மதிப்புள்ள 40 அடி கொள்கலன் ஒன்றை நன்கொடையாக அளித்ததாகக் கூறினார்.

“நேற்று என் நண்பர்கள் சிலர், கோவிட் -19 நோயாளிகளின் உடல்களை வைக்க, செலாயாங் மருத்துவமனையில் இடம் இல்லை என்று கூறினர்.

“நான் உடனடியாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர், மொஹமட் ஷஃபிக் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டு கொள்கலன் அனுப்ப அனுமதி பெற்றேன்.

“அவர் உடனடியாக தனது ஒப்புதலை வழங்கினார். கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் முனைமுகப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், இது எனது பங்களிப்பு,” என்று அவர் இன்று செலாயாங் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, செலாயாங் மருத்துவமனை துணை இயக்குநர், டாக்டர் தெங்கு இந்தான் நோர்லின் தெங்கு ஷெரீப் மருத்துவமனை சார்பாகக் கொள்கலனைப் பெற்றுகொண்டு, திருமூர்த்திக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“இதன் பின்னர், உடல் மேலாண்மை செயல்முறை சீராக மேற்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மற்றொரு தொழிலதிபரான ஜெயேந்திரன் இராமசாமி, 46, வேறு மருத்துவமனைக்கு உடல் கொள்கலன் தேவைபட்டால், நன்கொடை அளிக்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

“நான் ஏற்கனவே நன்கொடை அளிக்க ஒரு கொள்கலனைத் தயார் செய்துள்ளேன். சுகாதார அமைச்சின் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன்.

“ஒப்புதல் அளிக்கப்பட்டதும், தேவைபடும் மருத்துவமனைக்குக் கொள்கலன் அனுப்பப்படும்,” என்று அவர் கூறினார்.