அடிமைகள் போன்ற கட்டாய தொழிலாளர்களை மீட்க ஆணையம் தேவை,  மனிதவள அமைச்சு அமைக்க வேண்டும் – .குலா.

ஆர்.கிருஷ்ணன் – ” சைம் டார்பி பெர்ஹாட்” நிறுவனம் இவ்வாண்டு மார்ச் மாதவாக்கில் மனித உரிமை நிர்வாக ஆணை உருவாக்கத்திற்கு முன்மொழிந்த போது அதற்கு வாழ்த்துகளைக் கூறினேன். அவ்வாணையம் தொழிலாளர்களின் உரிமைகளையும் மனிதத் தன்மையுடன் மதிப்பீட்டு அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்த்தேன் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கூறினார்.

ஆனால், “சைம் டார்பி” நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட அந்த ஆணையம் நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது தொழிலாளர்களின் உரிமைக்கு ஒரு பலத்த அடியாகும்.

ஆள்கடத்தல் அறிக்கையின் படி, நம் நாட்டின் தரம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அனைத்துலக ஒப்பீட்டின் படி நாம் தொழிலாளர்களுக்கு சாதகமற்ற வழிமுறைகளுக்கு ஏற்ப இயங்குவதாகப் பொருள்படும்,

அடிமைகள் போன்ற கட்டாய தொழிலாளர்களை மீட்க ஆணையம் தேவை என்பதை அனைவரும் ஏற்க வேண்டும். இது ஒருவரின் முயற்சியாக அமையாது. மாறாக, ஒட்டுமொத்த நிறுவனங்களும் முனைப்புக் காட்ட வேண்டும்.

மனிதவள அமைச்சு இந்த திட்டத்தை வழிநடத்திச் செல்வதோடு இந்த கட்டாய தொழிலாளர்கள் வேலைக்குயமர்த்தும் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாம் என்கிறார் குலா.

 காலதாமதம் இல்லாமல் தற்போதைய மனிதவள அமைச்சு இந்த ஆணையத்தை அமைக்க அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் தெரிவித்தார்.