டத்தாரான் மெர்டேக்காவில் கருப்புக் கொடி, சடலப் பொம்மை போராட்டம்

நேற்று, டத்தாரான் மெர்டேக்காவில், பதினான்கு கறுப்புக் கொடிகள் அசைக்கப்பட்டு, 5 வெள்ளை நிற சடலப் பொம்மைகளுடன், மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) ஒரு ‘ஃபிளாஷ் மோப்‘ -ஐ ஏற்பாடு செய்தது.

ஓர் அறிக்கையில், கோவிட் -19 மற்றும் தற்கொலை காரணமாக அதிகரித்து வரும் இறந்தவர்களின் எண்ணிக்கையை அது குறிப்பதாக கூறப்பட்டது.

சடலப் பொம்மையின் அருகில், #keluardanlawan (கெலுவார் டான் லாவான்) என்ற ஹேஷ்டேக் சுலோகத்துடன் “கலகத்தினால் நாங்கள் இறக்கிறோம்” என்ற பதாகை ஒன்றும் இருந்தது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களின் “மக்களின் கோபத்தை” குறிக்கும் பதினான்கு கருப்பு கொடிகள், #against மற்றும் #GovernmentFailed என்ற ஹேஷ்டேக்குகளுடன் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டன.

“கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில், தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நம்பகத்தன்மை தோல்வியுற்றது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம், வெள்ளைக் கொடியை உயர்த்திய மக்களின் தலைவிதி கூட அவமதிக்கப்படுகிறது, கோவிட் -19 எண்ணிக்கை கூட கூர்மையாகி, அதிகரித்து வருகிறது.

“மக்களின் வெள்ளைக் கொடி ஒற்றுமை பிரச்சாரத்தைத் தொடர்ந்து கேலி செய்யும் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அணுகுமுறை மிகவும் உணர்ச்சியற்றது மற்றும் வருமான பற்றாக்குறை அல்லது கோவிட் -19 தொற்று காரணமாக இறப்பது போன்றவற்றின் அழுத்தங்கள் மற்றும் மனச்சோர்வடைந்த மக்களின் குறைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

“நீலக் கொடியை உயர்த்த, பிரதமர் இன்னும் வேடிக்கையான நகைச்சுவைகளைச் செய்ய முடிகிறது,” என்று எஸ்.எஸ்.ஆர். தெரிவித்தது.

பிரதமர் முஹைதீன் யாசினுக்கு இந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது, கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து உதவிகள் வழங்கப்படும் என்பதால், மக்கள் வெள்ளைக் கொடியைப் பறக்கவிடத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

“வெள்ளைக் கொடியோ கறுப்புக் கொடியோ உயர்த்த வேண்டிய அவசியமில்லை. நீலக் கொடியைப் பறக்கவிட்டால் பரவாயில்லை. அதாவது, யாருக்கு உதவி தேவை என்பது எங்களுக்குத் தெரியும், அமைச்சிடம் பதிவு உள்ளது,” என்று ஜூலை 15-ம் தேதி முஹைதீன் கூறினார்.

இதற்கிடையில், எஸ்.எஸ்.ஆர். தனது அறிக்கையில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தது, அதாவது முஹைதீனை இராஜினாமா செய்யுமாறு அது வலியுறுத்தியது, மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை “அரசாங்கத்தின் பிரச்சாரமாக” மட்டுமல்லாமல், முழுமையாக நடத்த வேண்டும், அனைவருக்கும் தானியங்கி முறையில் கடன் ஒத்திவைப்பை வழங்க வேண்டும்.

ஜூலை 26-ம் தேதி தொடங்கும் நாடாளூமன்றம், ஐந்து நாட்கள் அமரும். எவ்வாறாயினும், கொடுக்கப்பட்ட மக்களவை அட்டவணையில், அரசாங்கத்தின் கோவிட் -19 நிலைமை குறித்த விளக்கங்களுக்காகப் பெரும்பாலான அமர்வுகள் செலவிடப்படும் என்பதைக் குறிக்கிறது.

இதற்கிடையில், கடன் ஒத்துவைப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்றாலும் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். அக்காலகட்டத்தில், கடன்களுக்கான வட்டி அதிகரிப்பது பற்றியும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசாங்கத்தின் மீதான விரக்தியைக் காட்ட, மக்களைக் கருப்பு நிற ஆடை அணிய வேண்டுமென்றும் எஸ்.எஸ்.ஆர். வலியுறுத்தியது.

ஆர்ப்பாட்டம் சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது, போலிசார் நிலைமையைக் கண்காணித்தனர்.

இருப்பினும், எவரும் கைது செய்யப்படவில்லை, மேலும் ஏற்பாட்டாளர்களில் ஒருவரின் அடையாள அட்டையின் படத்தை மட்டுமே போலீசார் எடுத்தனர்.

பின்னர் ஓர் அறிக்கையில், ஏற்பாட்டாளர்களில் மூவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டம், தொற்று நோய்கள் மற்றும் கட்டுப்பாடு (நோய்த்தொற்றின் உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) ஒழுங்குமுறைகள் (தேசிய மறுவாழ்வு திட்டம்) 2021-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.