சினோவாக் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் – லிம் வலியுறுத்து

சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிலியில் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, கோவிட் -19 சினோவாக் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, செயல்திறன் நிலை குறித்த தரவு மற்றும் அறிவியலின் அடிப்படையில், மக்களிடையே எழும்பியுள்ள சந்தேகங்களையும் குழப்பங்களையும் நீக்க விளக்கம் வேண்டும் என்று லிம் கூறினார்.

“அவ்வாறு செய்யத் தவறினால், பிஎன் அரசாங்கத் திட்டம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைய நேரிடும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மாதம், தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஹாங்காங்கின் ஓர் ஆய்வில், ஃபைசர்-பயோன்டெக் எம்ஆர்என்ஏ தடுப்பூசி பெற்றவர்கள், சினோவாக் தடுப்பூசியைப் பெற்றவர்களை விட பத்து மடங்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியைப் கொண்டுள்ளதாக கூறப்பட்டது.

சிலியில், சினோவாக் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மூன்றாவது மருந்தளவு கொடுக்க பரிந்துரைத்தனர், ஏனெனில் அவர்களின் ஆய்வில் சோதனையில் பங்கேற்பாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அளவு ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைந்துவிட்டது.

உலகச் சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலைப் பெற்றிருந்தாலும், சீனா தயாரித்த தடுப்பூசியை விமர்சிப்பது போன்ற உலகின் முக்கியச் சக்திகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டிக்கு இழுக்கப்படாமல் இருக்க, எழும் சந்தேகங்களை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று லிம் கூறினார்.

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை (பிக்) டிஏபி முழுமையாக ஆதரிக்கும் அதே வேளையில், கொள்கையின் திசை குறித்து தெளிவான மற்றும் சரியான விளக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இல்லையெனில், இது சினோவாக் தடுப்பூசியை ஏற்கனவே பெற்றவர்கள் உட்பட, அதிகமான மக்களுக்குச் சந்தேகத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.