செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு முன்னதாக, கோவிட் -19 தடுப்பூசி போடாத மாணவர்களை எவ்வாறு கையாளத் திட்டமிட்டுள்ளது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கூறினார்.
சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) இடர் மதிப்பீட்டிற்கு உட்பட்டு, செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு சனிக்கிழமை அறிவித்ததை அடுத்து அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, கோவிட் -19 ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போட அரசாங்கம் ஆரம்பத்தில் திட்டமிட்டது, ஆனால் பின்னர் இதய அழற்சி ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அத்திட்டத்தை ஒத்திவைத்தது.
இப்போதைக்கு, அரசாங்கம் தடுப்பூசியை நல்ல உடல்நிலையுடன் கூடிய இளையர்களுக்கு மட்டுமே தருகிறது, பிற இளையர்களுக்குப் பின்னர் கொடுக்க வாய்ப்புள்ளது.
“தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அமைச்சு எவ்வாறு உறுதி செய்கிறது.
“இந்தப் புதிய டெல்டா மாறுபாடு பரவியதைத் தொடர்ந்து, பல இடையூறுகள் பதிவாகியுள்ளன. பள்ளிகளில் மட்டுமல்ல, பெற்றோர்கள், பேருந்து ஓட்டுநர்கள், உணவு வழங்குநர்களான சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது பள்ளி சூழல்.
“ஆக, இது செயல்படுத்தப்படுவதை நாம் முறையாக உறுதி செய்ய வேண்டும், இந்த முடிவு நாட்டிற்கு ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது,” என்று சலாவுதீன் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தடுப்பூசி போடப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் விழுக்காட்டை வெளியிடுமாறு கல்வி அமைச்சை அவர் கேட்டுக்கொண்டார்.
தெளிவான எஸ்.ஓ.பி.-க்கள் இல்லாமல், கல்வி தொடர்பான கோவிட் -19 புதியத் திரளைகள் தோன்றுவதற்கான ஆபத்து இருப்பதாக சலாவுதீன் நினைவுபடுத்தினார்.
இதுபோன்ற திரளைகள் ஏப்ரல் மாதத்தில் நடந்தன, ஆனால் மே மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்ட பின்னர் அது தணிந்தது.
150,000 இலவச மடிக்கணினிகளை, மாணவர்களின் இல்லிருப்புக் கற்றலுக்கு வழங்குவதாக உறுதியளித்தது தொடர்பிலும் சலாவுதீன் விளக்கம் கோரினார்.
ஜூன் தொடக்கத்தில், அரசாங்கம் 13,000 மடிக்கணினிகளை விநியோகித்ததாக அறிவித்தது, ஏப்ரல் மாதத்தில் அறிவித்த அதே எண்ணிக்கை அதுவாகும்.