தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட மூன்று கோவிட் -19 தடுப்பூசிகள், மெசஞ்சர் ஆர்.என்.ஏ. (எம்.ஆர்.என்.ஏ.) உட்பட, அடுத்த ஆண்டுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளும், பயனர்களுக்கு ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டியுள்ளது, தாய்லாந்து அரசாங்கத்தின் கு ஃபா முகநூலில் காட்டப்பட்டது.
இதற்கிடையில், தாய்லாந்து நேற்று மேலும் 20 மில்லியன் மருந்தளவு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஆண்டு நான்காம் காலாண்டில் எம்ஆர்என்ஏ தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஓர் அறிக்கையில் கூறியது.
“கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான, நாட்டின் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான கூட்டு உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தாய்லாந்து அரசாங்கத்துடன் இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று ஃபைசர் (தாய்லாந்து) மற்றும் இந்தோசீனா லிமிடெட்டின் மேலாளர் டெபோரா சீஃபர்ட் கூறினார்.
இன்றுவரை, தாய்லாந்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ.) சினோவாக், அஸ்ட்ராஸெனெகா, ஜான்சன் & ஜான்சன், மோடர்னா, சினோஃபார்ம் மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் ஆகிய ஆறு வகை கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், தாய்லாந்தில் மூன்று தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன – சினோவாக், சினோஃபார்ம் மற்றும் அஸ்ட்ராஸெனெகா – இதுவரை எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில், தாய்லாந்தில் 11,305 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 80 இறப்புகளும் பதிவாகியுள்ளன, இது மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 426,475 ஆகவும், உயிரிழப்புகளை 3,502 ஆகவும் உயர்த்தியுள்ளது.
- பெர்னாமா