இன்று, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில், RM1.12 மில்லியன் மதிப்புள்ள பெர்சத்து நிதியைச் சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில், இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் தான் குற்றவாளி அல்ல என்று ஒப்புக்கொண்டார்.
முதல் குற்றச்சாட்டின் படி, கடந்த ஆண்டு, மார்ச் 6-ஆம் தேதி, கோலாலம்பூர், கே.எல். செண்ட்ரலில் உள்ள சி.ஐ.எம்.பி. வங்கி காசோலை மூலம், பெர்சத்துவுக்குச் சொந்தமான நிதியை சையத் சாதிக் தவறாகப் பயன்படுத்தினர்ர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டாவது குற்றச்சாட்டு, கடந்த பொதுத் தேர்தலுக்காக (ஜி.இ.), ஆர்மடா சேகரித்த RM120,000 மதிப்புள்ள நிதியை, சையத் சாதிக் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2018, ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 21 இடையில், கோலாலம்பூர், மேபேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட், தாமான் பாண்டான் ஜெயா கிளையில் அவர் இக்குற்றத்தைப் புரிந்தததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஒரு நபர் மற்றும் RM330,000 ஜாமீனுடன், சையத் சதிக்குக்கு அஸுரா ஜாமீனை அனுமதித்தார்.
சையத் சதிக் தனது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படியும், வழக்கு முடிவடையும் வரை, ஒவ்வொரு மாதமும் கோலாலம்பூர் அருகிலுள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இருப்பினும், சையத் சதிக் சார்பில், வழக்குரைஞர் கோபிந்த் சிங் தியோ சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஏற்று, ஜாமீன் தொகையில் RM80,000 இன்றும், மீதமுள்ள தொகையை அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள்ளும் செலுத்த அஸுரா அனுமதித்தார்.
ஃபரிட்ஸ் கோஹிம் அப்துல்லா துணை அரசு வழக்குரைஞராகச் செயல்படுகிறார்.
கடந்தாண்டு ஜூலை மாதம், சையத் சதிக் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது வீட்டின் இரும்புப் பெட்டியில் இருந்து, சுமார் RM250,000 களவு போனதாக போலீஸ் புகார் செய்தார்.
தனது வீட்டைப் புதுப்பிக்கும் பணிக்காக, அப்பணத்தின் பெரும்பகுதி அங்கு வைக்கப்பட்டிருந்தாக அவர் கூறினார்.
இருப்பினும், “சந்தேகத்திற்கிடமான” அந்தப் பண இழப்பு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) விசாரணையைத் தூண்டியது, அவர் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது என்ற கூற்றை எம்.ஏ.சி.சி. முன்பு மறுத்தது.
முதல் குற்றச்சாட்டு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 405-இன் கீழ், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, சவுக்கடி மற்றும் தண்டம் விதிக்கப்படுகிறது.
இரண்டாவது குற்றச்சாட்டு, அதேச் சட்டத்தின் பிரிவு 403-இன் கீழ், ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை, சவுக்கடி மற்றும் தண்டம் விதிக்கப்படுகிறது.
இன்றைய நடவடிக்கைகளில், முதல் குற்றச்சாட்டுக்கு RM500,000 மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு RM300,000 என ஜாமீன் வழங்குமாறு ஃபரிட்ஸ் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
சையத் சாதிக் தனது வழக்கைப் பற்றி நீதிமன்றத்திற்கு வெளியே பேச தடை விதிக்குமாறும் துணை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.