சையத் சதிக் 24 மணி நேரத்தில் RM700,000-க்கும் அதிகமாகச் சேகரித்தார்

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான், தனக்கான ஜாமீன் தொகையைச் செலுத்த, 24 மணி நேரத்திற்குள் RM700,000-க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதை அடுத்து, பொது மக்களின் பங்களிப்பை நிறுத்தினார்.

சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகை, 9,836 பங்களிப்பாளர்களிடமிருந்து RM715,573.77 ஆகும்.

RM1.12 மில்லியன் மதிப்புள்ள பெர்சத்து நிதியைத் தவறாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவருக்கான RM330,000 ஜாமீனைச் செலுத்தத் தேவையானதை விட இந்தத் தொகை அதிகமானது என்றார் அவர்.

முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரான அவர், பொதுமக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், ஒரு முதியவர் தனது அலுவலகத்திற்கு RM100 நன்கொடையாக வழங்க வந்தது, தன்னைக் கண் கலங்க வைத்தது என்றார்.

“நான் நிதி திரட்டலை முடித்து கொள்கிறேன், ஏனெனில் ஜாமினுக்காகச் செலுத்துவதற்கான நிதி போதுமானதை விட அதிகமாக உள்ளது.

RM1.12 மில்லியன் மதிப்புள்ள பெர்சத்து நிதியைத் தவறாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில், சையத் சதிக் மீது கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் குற்றவாளி அல்ல என்று தெரிவித்தார்.

அஸூரா பின்னர், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஒரு நபர் மற்றும் RM330,000-க்கு சையத் சதிக்குக்கு ஜாமின் அனுமதித்தார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை வரையில், அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று, முகநூலில் ஒரு நேரடி இடுகையின் மூலம் சையத் சதிக், ஜாமீனைச் செலுத்த உதவப் பொது மக்களிடம் நன்கொடை கேட்டார்.