அம்னோ : வரையறுக்கப்பட்ட ஆணையுடன் ஓர் இடைக்கால அரசாங்கம்

பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கும், 15-வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ) நாட்டைத் தயார்படுத்துவதற்கும், வரையறுக்கப்பட்ட ஆணை கொண்ட ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவ வேண்டுமென அம்னோ முன்மொழிந்துள்ளது.

“ஜிஇ நடத்தப்படும் போது, இந்த இடைக்கால அரசாங்கம் நிறுத்தப்படும்,” என்று அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டின் கூறினார்.

நேற்று, அவசரகாலச் சட்டம் ஜூலை 21-ம் தேதி, மன்னரின் ஒப்புதலைப் பெறாமலேயே இரத்து செய்யப்பட்டதாக, நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, மாட்சிமை தங்கிய மாமன்னர் மிகவும் வருத்தமாக இருப்பதாக அரண்மனை கூறியது.

ஜூலை 24-ம் தேதி, சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் மற்றும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் ஆகியோரின் உடன்படிக்கைக்கு முரணாக, மக்களவையின் நடவடிக்கை உள்ளது என்று அரண்மனை கூறியது.

எவ்வாறாயினும், அவசரகால ஆணையை இரத்து செய்வது முறையாக, சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விதிகளின்படி செய்யப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) தெரிவித்துள்ளது.

மத்திய அரசியலமைப்பின் 40 (1)-வது பிரிவின்படி, அகோங் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று பி.எம்.ஓ. வாதிடுகிறது.

இதற்கிடையே, இன்று ஓர் அறிக்கையில், நாடாளுமன்றம் தொடர்ந்து அமர வேண்டும் என்றும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் காலிட் சொன்னார்.