#லாவான் ஆர்ப்பாட்டம் : பிரதமரைப் பதவி விலகக் கோரி, நூற்றுக்கணக்கானோர் அணிவகுப்பு

இன்று, கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில், கறுப்பு உடையணிந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமர் முஹைதின் யாசின் பதவி விலக வேண்டுமெனக் கோரி ஒன்று கூடினர்.

“தோல்வியடைந்த அரசாங்கம்” என்று எழுதப்பட்டப் பதாகைகள் மற்றும் பெயர்ப் பலகைகளை அதிகமானோர் கையிலேந்திச் சென்றனர், மற்றவர்கள் கருப்பு கொடிகளை அசைத்தனர்.

கோவிட் -19 நோய்த்தொற்றை அரசாங்கம் தவறாக நிர்வகிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 இறப்பைக் குறிக்கும் வகையில், சடலங்களின் மாதிரிகளை அவர்களில் சிலர் எடுத்துச் சென்றனர்.

மெர்டேக்கா சதுக்கம் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்ததால், சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தைச் சுற்றி கூடினர்.

ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளரான மக்கள் ஒற்றுமை செயலகம், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 1,000 என மதிப்பிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், ஆனால் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உட்பட சில அரசியல் பிரமுகர்களும் அங்குக் காணப்பட்டனர்.

முன்னதாக, காலை 11.35 மணிக்கு, “கொடுங்கோன்மை அரசாங்கத்தை எதிர்ப்போம்!” மற்றும் “முஹைதீனை பதவியிலிருந்து விலக்குவோம்!” என்று கோஷமிட்டபடி அவர்கள் மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கி அணிவகுத்தனர்.

மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி, காவல்துறையினரும் கோலாலம்பூர் நகர மண்டபமும் போராட்டம் நடந்த பகுதியைக் கண்காணித்து வந்தனர்.

மக்கள் ஒற்றுமை செயலகத்தின் இளைஞர் குழு ஏற்பாடு செய்த இன்றையப் போராட்டம், பிரதமர் முஹைதீன் யாசினை இராஜினாமா செய்யக் கோரியது.

இதற்கிடையில், #Lawan (#லாவான்) என்ற ஹேஷ்டேக் இப்போது மலேசியக் கீச்சகத்தில், 100,000-க்கும் மேற்பட்ட கீச்`களுடன் பிரபலமாக உள்ளது.