இன்று, கோலாலம்பூரில் நடந்த #லாவான் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மக்கள் ஒற்றுமை செயலகத்தைச் சார்ந்த (எஸ்.எஸ்.ஆர்.) ஐவரைக் காவல்துறை அழைத்தது.
பேரணி அமைதியாகக் கலைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாளை காலை 10 மணிக்குத் தங்கள் வழக்கறிஞர்களுடன், டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்திற்குச் செல்லவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பேரணியில் 400 பேர் கலந்துகொண்டதாகப் போலீசார் மதிப்பிட்டனர், அதே நேரத்தில் மெர்டேக்கா சதுக்கம் மற்றும் கோலாலம்பூர் நகர மண்டபம் (டிபிகேஎல்) நோக்கி 3 கிமீ ஆர்ப்பாட்டத்தில் 2,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
முகமட் அப்துல்லா அல்ஷத்ரி, முகமது அஸ்ரஃப் ஷராஃபி முகமது அசார், தர்மலிங்கம் பிள்ளை, கைரா யூஸ்ரி மற்றும் சிவன் துரைசாமி ஆகிய 5 பேரைப் போலீசார் அழைத்தனர்.
“இன்று, #கெலுவார் டான்லாவான் (#KeluarDanLawan) பேரணியில், நேரடியாகவும் மெய்நிகரிலும் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மலேசியர்களுக்கு மக்கள் ஒற்றுமை செயலகம் நன்றி தெரிவிக்கிறது.
“பிரதமர் முஹிடின் யாசின் உடனடியாக பதவிவிலக வேண்டுமெனக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்துள்ளனர்,” என்று எஸ்எஸ்ஆர் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்கள் #லாவான் தொடர்பாக, 272,000-க்கும் அதிகமான கீச்’களையும், மெர்டேக்கா சதுக்கத்தைத் திறக்க வலியுறுத்தி 20,000 கீச்’களையும் செய்துள்ளதாகக் கூறினர்.
இன்றைய ஆர்ப்பாட்டம், மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தது, அதாவது முஹிடின் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றக் கூட்டம் தொடர அனுமதிக்க வேண்டும் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் அரசாங்கம் தானியங்கி முறையில் கடன் ஒத்திவைப்பு வழங்க வேண்டும் என்று அது கோரியது.
இதற்கிடையில், செந்தர இயங்குதல் நடைமுறைகளை முறையாகவும் எளிதாகவும் கடைபிடிக்கவே தாங்கள் மெர்டேக்கா சதுக்கத்தைத் தேர்ந்தெடுத்ததாக எஸ்எஸ்ஆர் கூறியது.
ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தல்களைக் கேட்டு, வெற்றிகரமாக எஸ்.ஓ.பி.க்கு இணங்கிய எங்கள் பங்கேற்பாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றி.
“இன்று, எங்கள் பங்கேற்பாளர்கள், எங்கள் உரிமைகளை நிலைநாட்ட தெருவில் பாதுகாப்பாக ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்பதைக் காட்டியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர், ஏசிபி ஜைனால் அப்துல்லா, பேரணி அமைதியாக இருந்தபோதிலும், அந்நடவடிக்கை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் விதிகளைத் தெளிவாக மீறியதால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.