‘இந்தியா அக்கான் புங்கோஸ்’ வீடியோ : அது என்னுடைய குரல் அல்ல – குலா

டிஏபி தேசிய உதவித் தலைவர் எம். குலசேகரன், ‘இந்தியச் சமூகத்தைத் தடுப்பூசி மூலம் கொல்ல அரசு முயல்கிறது’ என்று பரவும் ஆடியோவில் இருப்பது தனது குரல் என்பதை மறுத்தார்.

மாறாக, தனது குரலைப் பிரதிபலிக்க முயற்சிக்கும் யாரோ இதனைச் செய்துள்ளனர் என்று குலசேகரன் கூறினார்.

“அந்த வீடியோ உண்மையானது என்பதை நான் மறுக்கிறேன். எனது குரலை (டப்பிங்) பின்பற்ற முயற்சிக்கும் நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், அது தெளிவாக என் குரல் அல்ல.

“எனது டிக் டோக்கில், எனது அனைத்து வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

மலேசியாவில், தடுப்பூசி மூலம் “இந்தியர்களைக் கொல்ல” அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவைப் பற்றி கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

குலசேகரனின் முகத்தைக் காட்டும் வீடியோ மூலம், மலேசியாவில் இந்தியச் சமூகத்தை ஒழிப்பதற்கான வழிகளைத் தேசிய கூட்டணி (பிஎன்) அரசு சிந்திப்பதாகக் அக்குரல் கேட்டது.

அந்த 54 வினாடி வீடியோவில் உள்ள குரல், இந்தியச் சமூகத்திற்கு வெவ்வேறு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது, இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியச் சமூகம் ‘அக்கான் புங்கோஸ்’ (முடிந்துபோகும்) என்று கூறிகிறது.

அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது : அனைவருக்கும் வணக்கம். மலேசியாவில் இந்தியர்களை எப்படி ஒழிக்கலாம் என்று அரசாங்கம் தற்போது சிந்தித்து வருகிறது. நாம் அதிகமாகப் பேசுவதாகக் கருதப்படுவதால் அவர்கள் நம்மைக் கொல்ல வேண்டும் என நினைக்கிறார்கள்.

“ஆனால் நாங்கள் (இந்தியத் தலைவர்கள்) எதுவும் செய்ய முடியாது. நாங்கள் (இந்தியத் தலைவர்கள்) அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும், ஏனென்றால் எங்கள் சம்பளம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, என்ன நடக்கும் என்றால், தற்போது இந்தியர்களுக்கு வழங்கப்படும் கோவிட் தடுப்பூசி, இரண்டு ஆண்டுகளில் எல்லா இந்தியர்களையும் ‘புங்கோஸ்’ ஆக்கிவிடும் (முடித்துவிடும்).

“இந்தத் தடுப்பூசி அவர்களுக்கு (மற்ற இனங்களுக்கு) இல்லை. இந்தியர்களுக்கு ஊசி போடும் போது அவர்கள் தடுப்பூசியை மாற்றுவார்கள். ‘இந்தியர்களுக்குப் பை பை’’ (Bye bye).

இதற்கிடையில், தனது குரலைப் பிரதிபலிக்க முயன்ற தனிநபர்களின் செயல் ஏமாற்றமளிப்பதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் கூறினார்.

“நான் வறுத்தப்படுகிறேன், நேரத்தை வீணடிக்கும் விஷயங்களைச் செய்ய அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது.

“நம் சமுதாயத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. உங்கள் சமுதாயத்திற்கு நல்லது செய்ய முயற்சியுங்கள்.

“உங்கள் சமூகத்திற்கு எது சிறந்தது என்று சிந்தியுங்கள். நான் காவல்துறையில் புகார் அளித்தால், போலீசார் உங்களைக் கைது செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பின்னர் உங்கள் குடும்பம் சிக்கலில் இருக்கும்.

“மற்றவர்களின் குரல்களைப் பின்பற்றும் திறமை உங்களிடம் உள்ளது, அந்தத் திறமையை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள்,” என்று அவர் கூறினார்.