கோலாலம்பூரில், நேற்று நடந்த #லாவான் ஆர்ப்பாட்டம் அமைதியாகவும், எந்தவொரு அசம்பாவிதச் சம்பவங்களும் இல்லாமல் நடந்ததாக, ஏழு பார்வையாளர்களின் அறிக்கை முடிவுகளை மேற்கோள் காட்டி, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறியது.
சுமார் 1,000 பேர் பங்கேற்றதாகச் சுஹாகாம் மதிப்பிட்ட வேளையில், 400 பேர் கலந்துகொண்டதாக போலீசார் கூறினர்.
இதற்கிடையில், கோலாலம்பூர் நகர மண்டபம் (டிபிகேஎல்) சந்திப்பில் இருந்து, ஜமேக் மசூதி எல்ஆர்டி வரை 3 கிமீ தூரத்திற்கு, நேற்று காலை 10.30 மணி முதல் சுமார் 2,000 ஆதரவாளர்கள் கூடினர் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
“தங்கள் உரிமையை நிலைநாட்டிய அதே வேளையில், பொறுப்புடன் செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் சுஹாகாம் தனது வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறது. அமைதியான ஒன்றுகூடல் உரிமையை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பொது சுகாதார எஸ்.ஓ.பி.களுக்கு இணங்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறது,” என்று சுஹாகம் கூறியது.
மக்கள் ஒற்றுமை செயலகத்தின் ஏற்பாட்டாளர்கள், நேற்று திட்டமிட்டபடி மெர்டேக்கா சதுக்கத்தில் கூடுவதைத் தடுத்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர், இது பாதுகாப்பான சமூகத் தூரத்தை எளிதாக்க மிகப் பெரிய இடம் என்று அது குறிப்பிட்டது.
அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஓர் உரிமை என்றும் சுஹாகாம் கூறியது.
இதனால், தங்கள் உரிமைகளைப் பயன்படுத்திய தனிநபர்களுக்கு எதிரான அனைத்து விசாரணைகளையும் குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறு சுஹாகாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துகிறது.
முன்னதாக இன்று, போலிஸ் படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி #லாவான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 29 பேரை விசாரணைக்கு அழைக்க அடையாளம் கண்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (உள்ளூர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகள்) (தேசிய மறுவாழ்வுத் திட்டம்) விதிமுறைகள் 2021 மற்றும் பிறத் தொடர்புடைய சட்டங்களின் சட்டம் 342 மற்றும் விதிமுறை 17 (1)-ன் கீழ், பங்கேற்பாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.