யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உத்தரவை ஒதுக்கி வைக்கும் வகையில் அமைந்த, அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரனின் அறிக்கை திமிர்தனம் கொண்டதாகப் பிகேஆர் கருதுகிறது.
விக்னேஸ்வரன் அரசாணை மீதான விவாதத்தைப் பயனற்றது என்று கருதுவது ஏற்புடையதல்ல என்று பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டா அகின் சொன்னார்.
“அகோங்கின் ஆணையை ஆணவத்துடன் மீறும் இந்த விக்னேஸ்வரன் யார்?” என்று அவர் இன்று ஒரு செய்திக்குறிப்பில் கேள்வி எழுப்பினார்.
அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, விவாதிக்க வேண்டும் என்று முன்பு தெளிவாக உத்தரவிட்டார் என்று ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான ஷம்சுல் இஸ்கண்டார் விளக்கினார்.
“இந்த அரசாணை மீதான விவாதத்தை வீண் என்று சொல்ல அவருக்கு (விக்னேஸ்வரன்) என்ன தைரியம்?” என்று அவர் மேலும் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்க உதவும் வகையில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், மக்களவையில் அவசரகாலச் சட்டம் பற்றிய விவாதம் நேர விரயம் என்று நேற்று விக்னேஸ்வரன் சொன்னதாகக் கூறப்படுகிறது.
அந்த மேலவை முன்னாள் சபாநாயகரின் கூற்றுப்படி, மக்களவை உறுப்பினர்கள் அவசரகால கட்டளை பற்றி விவாதிப்பது அவசியமற்றது.
ஒரே ஒரு வழிதான் உள்ளது
ஷம்சுல் இஸ்கண்டாரின் கூற்றுப்படி, அனைத்து தேசியக் கூட்டமைப்பின் (பிஎன்) தலைவர்களும், `ஈரமான நூலை நேராக்குவதற்கான` முயற்சிகளை நிறுத்த வேண்டும், ஏனெனில் ஓர் அரசாங்கமாக அவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
“கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, அதோடு மட்டுமின்றி, மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் உத்தரவை நிலைநாட்டவும் அது தவறிவிட்டது.
“பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் இன்று ஒரே ஒரு வழிதான் உள்ளது, மரியாதையுடன் அவர்கள் பதவி விலக வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தேசிய முன்னணியில், ம.சீ.ச., மற்றும் அம்னோவுடன் ஓர் அங்கமாக ம.இ.கா. இருக்கிறது.
தற்போதைய பிரதமர் முஹைதீன் யாசினுக்கான எம்.பி.க்களின் ஆதரவைத் திரும்பப் பெற அம்னோ முடிவு செய்துள்ளது.
எனினும், முஹைதீனின் அமைச்சர்களாக இருக்கும் அம்னோ எம்.பி.க்கள் யாரும் தங்கள் உச்சமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்காததால், அம்முயற்சி கடினமாக காணப்படுகிறது.
மறுபுறம், ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. அரசாங்கத்திற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதோடு, முஹிதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான எந்த முடிவும் ஒருமித்த கருத்தினால் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.
ஜூலை 31-ம் தேதி, ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. தகவல் பிரிவு தலைவர்கள், முஹைதீன் யாசினுக்கும்ம் அவரது அமைச்சரவைக்கும் ஆதரவாக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். பதிவுக்காக ம.சீ.ச.வும் ம.இ.கா.வும் அமைச்சரவையில் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.
நேற்று, பேராக் ம.சீ.ச. இளைஞர் பிரிவுத் தலைவர், கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் வகையில், நாட்டை வழிநடத்த அதிகத் தகுதி வாய்ந்தவர்களை அனுமதிக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் முஹிதீனுக்கு அழைப்பு விடுத்தார்.