இன்று காலை, நாடாளுமன்றத்தை மூடி, மக்களவை உறுப்பினர்களை நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுத்தது குறித்து, ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர், அக்மால் நசீர் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் இருவரும், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
“நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் எந்த நாட்டிலும், மக்களால் ஆணை மற்றும் நம்பிக்கை அளிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குச் செல்ல பொறுப்பும் கடமையும் கொண்டவர்கள்.
“யாங் டிபெர்த்துவான் அகோங்கால் பல முறை கட்டளையிடப்பட்டபடி, எம்.பி.க்களும் அரசாங்கப் பிரதிநிதிகளும் கூட்டாட்சி அரசியலமைப்பில் வழங்கப்பட்ட செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்,” என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை, கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் (ஐபிடி) போலீஸ் புகார் தாக்கல் செய்யப்பட்டது.
மலேசியாகினி பார்வையிட்ட அப்புகார் அறிக்கை நகலில் மேலும், தடைக்கு உத்தரவிட்ட தரப்பினர் சட்டத்தின் பல விதிகளை மீறியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர், அதாவது:
- தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 – நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டபூர்வமான தங்களின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதை வலுக்கட்டாயமாகத் தாக்குவது, தடுப்பது அல்லது அச்சுறுத்துவது.
- தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124B – நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்தல்.
- தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124C – நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
- நாடாளுமன்றக் கவுன்சில்கள் (சலுகைகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டம் 1952- இன் பிரிவு 9(e) – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது.
முன்னதாக, 107 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்துச் செல்வதற்கு முன், மெர்டேக்கா சதுக்கத்தில் கூடினர்.
எனினும், காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால், அவர்களால் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முடியவில்லை.
பேங்க் ரக்யாட் தலைமையகக் கட்டடத்திற்கு அருகில், ஜாலான் பார்லிமென்ட்டில் தொடங்கி சாலை தடுப்பைப் போலீஸார் அமைத்தனர்.
இன்று கூடவிருந்த நாடாளுமன்றம், கோவிட் -19 நேர்வுகள் வெடித்த காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று, நாடாளுமன்றத்தில் இருந்த 1,183 பேரில், 11 பேர் கோவிட் -19 தொற்றுக்கு ஆளாயினர்.